×

கொச்சியில் தமிழக பஸ் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவருக்கு 6 வருடம் சிறை: என்ஐஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவனந்தபுரம்: மதானி கைது செய்யப்பட்டதை கண்டித்து கொச்சியில் தமிழக அரசு பஸ்சை துப்பாக்கி முனையில் கடத்தி எரிக்கப்பட்ட சம்பவத்தில், என்ஐஏ நீதிமன்றம் ஒருவருக்கு 6 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1.6 லட்சம் அபராதமும் விதித்தது. கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான அப்துல் நாசர் மதானியை, கடந்த 2005ம் ஆண்டு தமிழக போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். மதானி கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் அவரது கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் கடந்த 2005 செப்டம்பர் 9ம் ேததி இரவில் கொச்சியில் இருந்து சேலம் புறப்பட்ட தமிழக அரசு பஸ்சை, ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் டிரைவரை மிரட்டி கடத்தி சென்றது. பின்னர் கொச்சி, களமசேரி பகுதியில் வைத்து அந்த கும்பல் பயணிகளை இறக்கி விட்டு பஸ்சுக்கு தீ வைத்தது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பஸ்சை எரித்தது மதானியின் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்சியை சேர்ந்த நசீர், மஜீத், அப்துல் ஹாலிம் உள்பட 11 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், பஸ் எரிப்பு சம்பவத்திற்கு மதானியின் மனைவி சூசியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு கடந்த 2009ம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதுதொடர்பாக என்ஐஏ சார்பில் 2010ம் ஆண்டு கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மதானி மனைவி சூசியா மதானி உள்பட 13 பேரும் குற்றவாளிகள் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கு தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அனூப் சம்பவத்திற்கு பின்னர் துபாய்க்கு தப்பி சென்றார். இவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைதானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.  இந்தநிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ நீதிமன்றம் அனூப்புக்கு 6 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1.6 லட்சம் அபராதமும் விதித்தது. மற்ற 12 பேருக்கும் ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post கொச்சியில் தமிழக பஸ் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவருக்கு 6 வருடம் சிறை: என்ஐஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kochi ,NIA ,Thiruvananthapuram ,Madani ,Nadu ,Dinakaran ,
× RELATED கொச்சியில் மேகவெடிப்பால் கொட்டித்...