மும்பை, மார்ச் 9: பாலிவுட் படத்துக்காக சல்மான் கானுடன் இணைந்துள்ளார் ராம்சரண். தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். ஆர்ஆர்ஆர் படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். இவர் இந்தியில் சன்ஜீர் என்ற படத்தில் நடித்தார். இது, அமிதாப் பச்சனின் பழைய படமான சன்ஜீர் படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படம் கிஸி கா பாய் கிஸி கி ஜான். இப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்த மாதம் ரிலீசாகிறது.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்தான் கிஸி கா பாய் கிஸி கி ஜான். தமன்னா நடித்த வேடத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். வீரம் படத்தில் நாசர் நடித்த தந்தை வேடமாக இருந்ததை இதில் அண்ணன் வேடமாக மாற்றி, அதில் வெங்கடேஷ் நடித்திருக்கிறார். இதில் தென்னிந்திய பெண்ணாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் புரமோஷன் பாடல் ஒன்றில் நடிக்க ராம்சரணை தேர்வு செய்ய படக்குழு விரும்பியது.
சிரஞ்சீவியின் காட்பாதர் படத்தில் சல்மான் கான் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தின் புரமோஷன் பாடலிலும் நடித்தார். அந்த நட்பின் காரணமாக, சிரஞ்சீவியிடம் சல்மான் கான் பேசினார். இதையடுத்து தனது மகனை அழைத்து சல்மான் படத்தின் புரமோஷன் பாடலில் நடிக்கும்படி சிரஞ்சீவி கூறினாராம். இதையடுத்து உடனடியாக சல்மான் கானுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ராம்சரண்.