×

எம்.கே.தியாகராஜ பாகவதர் படம் பார்த்திபன் திடீர் திட்டம்

சென்னை: தமிழ்ப் படவுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் பற்றிய திரைப்படத்தை உருவாக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். கடந்த 1944 அக்டோபர் 16ம் தேதி தீபாவளி அன்று சென்னை சன் தியேட்டரில்  திரையிடப்பட்ட படம், ‘ஹரிதாஸ்’. அதே திரையரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை  படைத்த இப்படம், 1946 நவம்பர் 22ம் தேதி தீபாவளி வரை தொடர்ந்து ஓடியது. அதாவது, 3 தீபாவளி பண்டிகைகளை இப்படம் கொண்டாடியது. பிற  திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது.

இளங்கோவன் வசனம் எழுத, சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளியான இதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இப்படம் 10 லட்ச ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட மறைந்த எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு நேற்று 113வது பிறந்தநாள்.இதையொட்டி இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘புகழின் உச்சம் கண்டவர். மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர். பன்னீரில் குளித்து, கண்ணீரில் முகம் துடைத்தவர். லாஸ்ட் ரீல் மிக மோசமான சோகம். பாடமானது அவரது வாழ்க்கை. அதைப் படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்