×

உத்திரமேரூர் ஏரியை கலெக்டர் ஆய்வு: தூர்வாரி ஆக்கிரமிப்புக்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றானது உத்திரமேரூர் ஏரி. பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரிக்கு வைரமேக தடாகம் எனற ஒரு பெயரும் உண்டு. பொது பணித்துறைக்கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியினை சித்தேரி, பெரிய ஏரி என இரண்டாக பிரிக்கப்பட்டு பெரிய ஏரியில் 8 மதகுகள் முலமும், சித்தேரியில் 5 மதகுகள் முலமும் ஏரி நீர் பாசனத்திற்காக திறக்கப்படும். ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது காக்கநல்லூர், முருக்கேரி, ஆனைப்பள்ளம், மல்லிகாபுரம், கல்லமாநகர், மல்லியங்கரணை, காட்டுப்பாக்கம், மேனல்லூர், பாரதிபுரம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.  இது மட்டுமின்றி அங்குள்ள நீர்நிலைகளின் மிக முக்கிய நீராதாரமானவும் இந்த ஏரி நீர் விளங்குகிறது. இந்த நீரைக் கொண்டு விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்டவைகள் பயிரிடுவர். இந்நிலையில் ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் உபரி நீர்கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் கனமழை பெய்து மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் நிரம்பினாலும் உத்திரமேரூர் ஏரி மட்டும் நிரம்பாமல் இருக்கும் அவல நிலை உள்ளது. இந்நிலையில் உத்திரமேரூர் ஏரி ஆக்கிரமிப்புக்களை அகற்றி ஏரி முழுவதும் தூர்வாரி நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் உபரிநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி நேற்று உத்திரமேரூர் ஏரியினை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஏரியின் மதகுகள் மற்றும் ஏரியின் கொள்ளளவு பாசன வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அங்கு வந்த பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஏரி சுற்றியுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி கால்வாய்களை சீரமைத்து தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். அப்போது மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயசுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வேல்முருகன், வட்டாட்சியர் ஏகாம்பரம் உட்பட பலர் உடனிருந்தனர்….

The post உத்திரமேரூர் ஏரியை கலெக்டர் ஆய்வு: தூர்வாரி ஆக்கிரமிப்புக்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,Uthramerur ,Uthramerur Lake ,Kanchipuram district ,Vairamega ,
× RELATED சாலவாக்கத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை