×

சிறுவாட்டுக்காடு பகுதியில் அவசர கதியில் கட்டப்படும் பழங்குடியினர் குடியிருப்பு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடகாடு ஊராட்சி, சிறுவாட்டுக்காடு பகுதியில் 40க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் தங்கள் குடும்பத்துடன் கடந்த 80 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் இவர்கள் தகர செட் மற்றும் குடிசை அமைத்து வசிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் வனத்துறை சார்பில் பழங்குடியின மக்களுக்கு சிறுவாட்டுக்காடு பகுதியில் குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கியது. சிறுவாட்டுக்காடு மலைப்பகுதி என்பதால் மேடுபள்ளமாக உள்ளது. ஆனால் இப்பகுதியை சமன் செய்யாமல் 5 முதல் 8 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு, 10 அடிக்கு 10 அடி என்ற அளவில் சிறிய அளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் செலவில் குறைந்த பட்ஜெட்டில் வீடுகள் கட்டப்படுகின்றன. சரியான கட்டுமான பொருட்களை பயன்படுத்தாமல், குடியிருப்புகளை கட்டி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவசரகதியில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இது குறித்து ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பிரபா கூறுகையில், ‘‘சிறுவாட்டுக்காடு மலைப்பகுதிக்கு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே மின்சாரம் இல்லாமல் இருந்தது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியின் ஏற்பாட்டின்பேரில், அங்கு மின்மாற்றிகள் அமைத்து, மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. ஆனால் வனத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளுக்கு மின்சார வசதி மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டித்துவிட்டு, ஊராட்சிமன்றத்திடம் உரிய அனுமதி பெறாமலும், அவரவருக்கு வழங்கிய பட்டா நிலத்தில் வீடு கட்டாமல் மாறி, மாறி வீடுகளை கட்டி வருகின்றனர்’’ என்றார். ஊராட்சி அனுமதி பெற்று, மின் வசதி, குடிநீர் வசதியுடன் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டித் தர வேண்டுமென பழங்குடியின மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது….

The post சிறுவாட்டுக்காடு பகுதியில் அவசர கதியில் கட்டப்படும் பழங்குடியினர் குடியிருப்பு appeared first on Dinakaran.

Tags : Uruvatukkadu ,Otanshastram ,Dintugul District ,Otanshastram Union ,Suruvatukkadu ,Uruatuatkadu ,
× RELATED ‘குருப் 1ல் பாஸ்…. டிஎஸ்பி ஆகிட்டேன்’...