×

கோயில்களுக்கு நன்கொடையாக வரும் நகைகளை கட்டிகளாக மாற்றி வங்கிகளின் வட்டி மூலம் வருவாய்

* ரூ.550 கோடி மதிப்பிலான 120 ஏக்கர்  நிலங்கள் மீட்பு * அமைச்சர் சேகர்பாபு தகவல்சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில், பழனி தண்டாயுதபாணி, திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி ஆகிய 3 கோயில்களை திருப்பதி கோயிலுக்கு இணையாக மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கோயில்களில் நேரில் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக திருப்பதி கோயிலுக்கு இணையாக மாற்றும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளர்ச்சிப் பணிகள் குறித்த சிறப்பு ஆய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.இக்கூட்டத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ மார்க்கண்டேயன், செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், இணை ஆணையர் வான்மதி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதி, காத்திருப்பு அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. கடந்த மாதத்தோடு திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தேதி முடிவடைந்த நிலையில், குடமுழுக்கோடு, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இந்துசமய அறநிலைய துறையில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பணிகள் 70 நாட்களில் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்து அறநிலையத் துறையின் மூலம் ரூ.550 கோடி மதிப்பிலான 120 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு நன்கொடைகளாக வரும் நகைகளை கட்டிகளாக மாற்றி அதனை வங்கியில் வைப்பதன் மூலம் வட்டி வரும். இதனை துறை ரீதியான நிதியாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.திருச்செந்தூர் கோயிலில் ஆண்கள் சட்டை அணியாமல் செல்வது குறித்து, கோயில்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் பகுத்தறிவும், ஆன்மீகமும் ஒத்துப்போகும் வகையில் கடைபிடிக்கப்படும். அநாகரிகமான விஷயங்கள் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post கோயில்களுக்கு நன்கொடையாக வரும் நகைகளை கட்டிகளாக மாற்றி வங்கிகளின் வட்டி மூலம் வருவாய் appeared first on Dinakaran.

Tags : Minister ,Zegarbabu ,Hindu Religious Foundation ,
× RELATED வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை ரூ.5,180...