×

சமூகப்போராளி ஸ்டேன் சுவாமி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: மறைந்த சமூகப்போராளி ஸ்டேன் சுவாமி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் ஸ்டேன் சுவாமி. இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி உபா சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், கடந்த 5ம் தேதி அவர் காலமானார். இந்தநிலையில்,  ஸ்டேன் சுவாமியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ‘நீதிக்கான திருப்பயணம்’ என்ற பெயரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஸ்டேன் சுவாமியின் உருவப்படத்திற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தயாநிதி மாறன் எம்.பி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏக்கள் இனிகோ இருதயராஜ் மற்றும் சிந்தனைச் செல்வன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல், ஸ்டேன் சுவாமியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தன்னுடைய வாழ்க்கையை பழங்குடி மக்களுக்கு அர்ப்பணித்தவர் ஸ்டேன் சுவாமி. அவர் மீது பொய் குற்றச்ச்சாட்டை சுமத்தி, அவரின் உடல்நிலை சரியில்லாத போதும் அவரை சிறைக்கு அனுப்பியதால் அவரை நாம் இழந்துள்ளோம். எனவே, இதை கொலையாக தான் நாம் பார்க்க வேண்டும். பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு இடதுசாரி, ஜனநாயக சக்திகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. உபா போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. உள்ளாட்சி தேர்தலை திமுக கூட்டணியில் இருந்தே விசிக எதிர்கொள்ளும். இவ்வாறு கூறினார்….

The post சமூகப்போராளி ஸ்டேன் சுவாமி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : CM ,Stane Swami ,Stalin ,Chennai ,Stane Swami G.K. Stalin ,Maladuvi ,Jharkhand ,B.C. G.K. Stalin ,
× RELATED கிருஷ்ணகிரி பையூரில் 11 செ.மீ.மழை பதிவு..!!