×

மோடி அரசின் நிர்வாக திறமையின்மையால் நாட்டில் லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடல்: சசிதரூர் எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மோடி அரசின் நிர்வாக திறமையின்மையால் கொரோனா காலத்தில் நாட்டில் லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டது என்று சசிதரூர் எம்பி பரபரப்பு குற்றம்சாட்டினார்.  அகில இந்திய காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  ஒன்றிய பாஜ அரசின் தவறான ஆட்சி, தவறான நிர்வாகம் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவடைந்ததில் இருந்து 10 வாரங்களில் 40 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், விலை உயர்வு காரணமாக மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டன. வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்புவோம்.  ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்பட்டது, விவசாயிகள் பிரச்னை போன்றவை குறித்தும் குரல் எழுப்ப உள்ளோம். பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய நுகர்ப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். வரி வருவாயை மாநில அரசுகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பின்மை சதவீதம் இந்தியாவில் அதிகரித்துள்ளது.   கொரோனா பரவலை தொடர்ந்து இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமானோர் வேலை இழந்து தவிக்கின்றனர். இதற்கு, ஒன்றிய அரசின் நிர்வாக திறமையின்மை தான் காரணம்.  மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெளிவுபடுத்தி உள்ளார். பொதுவாகவே இருமாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும். அந்த அடிப்படையில் மேகதாது பிரச்னைக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.  ஊடகங்களை அடுத்த 6 மாதத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மிரட்டல் தொனியில் கூறியுள்ளார். அண்ணாமலை இதுபோன்று கருத்துக்களை பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ரபேல் ஊழல் குறித்து பிரெஞ்சு அரசு விசாரணை நடத்தி வருகிறது. நாங்களும்  விசாரணைக்கு கேட்டோம். தமிழ்நாடு உள்ளிட்ட நிறைய மாநிலங்களில்  தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இது பற்றியும் நாடாளுமன்றத்தில்  பேசுவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின் போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், விஜய் வசந்த் எம்பி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், நாஞ்சில் பிரசாத், ரஞ்சன் குமார், டில்லிபாபு ஆகியோர் உடன் இருந்தனர்….

The post மோடி அரசின் நிர்வாக திறமையின்மையால் நாட்டில் லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடல்: சசிதரூர் எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Sacitaroor ,Chennai ,Corona ,Sacitarur ,Sasitarur ,Dinakaran ,
× RELATED தோல்வி பயத்தில் பாஜகவும் மோடியும்: ப.சிதம்பரம் விமர்சனம்