×

வேலு நாச்சியார் வீரமங்கையாக ஆயிஷா

கடந்த 2019ல் ‘மிஸ் சென்னை’ பட்டம் வென்றவர், ஆயிஷா. தற்போது சட்டம் படிக்கிறார். ஸ்ரீதர் மாஸ்டரிடம் நடனம் கற்றுள்ள அவர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் தவசிராஜ், மிராக்கிள் மைக்கேல் ஆகியோரிடம் சண்டைப் பயிற்சி பெற்றார். மதுரை முத்துக்காமாட்சியிடம் வாள் சண்டை, சிலம்பாட்டம் கற்றார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு, ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கேரக்டரில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.

இதையடுத்து மருது சகோதரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் ‘மருது ஸ்கொயர்’ படத்தில், பெரிய மருது கேரக்டரில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். பெரிய மருது, சின்ன மருதுவின் தலைவியாக இருந்தவரும், இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையுமான வீரமங்கை வேலு நாச்சியார் கேரக்டரில் ஆயிஷா நடிக்கிறார். இந்த கேரக்டருக்காக ஆயிஷா வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.

இவர், ஜெ.எம்.பஷீரின் மகள். ‘மருது ஸ்கொயர்’ படத்தை டிரெண்ட்ஸ் சினிமா சார்பில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கிறார். ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’ போன்ற படங்களின் இயக்குனரும், ‘தேசிய தலைவர்’ படத்தை இயக்கி வருபவருமான ஆர்.அரவிந்த்ராஜ், அடுத்து ‘மருது ஸ்கொயர்’ படத்தை இயக்குகிறார். சின்ன மருதுவாக நடிப்பவருக்கான தேர்வு நடக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் ‘தேசிய தலைவர்’ படம் திரைக்கு வந்த பின்பு, சிவகங்கைச்சீமையில் இருக்கும் ராணியின் அரண்மனையில் ‘மருது ஸ்கொயர்’ படத்தை ராணி தொடங்கி வைக்கிறார்.

Tags : Ayesha ,Velu Nachiyar Veeramangai ,
× RELATED மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு விழா