×

விவசாயிகளுக்கு தோள் கொடுப்பதற்காக கிட்டி பொறி வைத்து எலி வேட்டையில் கலக்கும் தொழிலாளி: ஒரு எலிக்கு 5 ரூபாய் வசூல்

கோபி:  கோபி பகுதியில் நெல் பயிர்களை சேதப்படுத்தும்  எலிகளை பிடித்த அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ஒருவர் ஒரு எலிக்கு 5 ரூபாய் வசூலித்து விவசாயிகளை பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்றி வருகிறார். ஈரோடு  மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணையின் மூலமாக   தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசன  வாய்க்கால்கள் மூலமாக ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல்  உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இரு போக  சாகுபடி மூலமாக பல ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்து வரும் விவசாயிகளுக்கு  நடவு பணி முடிந்து ஒரு மாதத்தில் எலிகள் மூலமாக பெரும் சோதனை ஏற்பட்டு  வருகிறது. வயல்வெளியில் உள்ள எலிகள் நாள்தோறும் ஏராளமான நெல் பயிர்களை கடித்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஆண்டுதோறும் 30 முதல் 50 சதவீதம் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால்  நெல் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு  முன்  வேளாண்மைத்துறையினரிடம் உதவி கேட்கப்பட்டது. அப்போது தென்னை ஓலையை வயல்வெளியில்  நட்டு வைத்தால், அந்த பகுதியில் இரவு நேரங்களில் வரும் ஆந்தை உள்ளிட்ட   பறவைகள் எலியை கொன்று விடும் என்று கூறி உள்ளனர். விவசாயிகள் அந்த  திட்டத்தை செயல்படுத்தும்போது பகல் நேரங்களில் மற்ற பறவை இனங்கள் தென்னை  ஓலை மீது அமர்ந்து கீழே தள்ளி விடுவதால் அந்த திட்டம் பலனளிக்கவில்லை. இதனால் கடந்த கால முறைப்படி மீண்டும் கூண்டு வைத்தும், கிட்டி எனப்படும் எலிப்பொறி மூலமாகவும் எலிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். ஒரு ஏக்கரில் சராசரியாக 100 கிட்டிகள் போடப்படுகிறது. ஒரு எலிக்கு 5 ரூபாய் என்ற அடிப்படையில் கிட்டி வைக்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் 100 கிட்டிகள் வைக்கப்படும்போது 30 முதல் 40 எலிகள் வரை மட்டுமே பிடிபடுகிறது. இரண்டு மூன்று நாட்கள் கிட்டி போடப்பட்டால் கணிசமான தொகை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து கோபியை சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் கூறும்போது, ‘‘தடப்பள்ளி வாய்க்காலில் விவசாயம் செய்து வருகிறோம். முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் விடப்பட்டு 70 நாட்கள் ஆகிறது. ஒரு  ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் இன்னும் 60 நாளில்  நெல் அறுவடை செய்ய வேண்டும் என்ற நிலையில், தற்போது எலி தொல்லை காரணமாக பெரும் சேதமடைந்து உள்ளது. நெல் மணிகள் உருவாகும்போது  எலிகளால் 50 சதவீதம் வரை பயிர்கள் சேதமடைந்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்கள் கைகொடுக்காத நிலையில், கிட்டி முறையிலேயே எலி பிடிக்க நடவடிக்கை எடுத்தாலும்  100 கிட்டிக்கு 30 எலிதான் பிடிபடுகிறது. இதனால் முழுமையாக எலியை  கட்டுப்படுத்த முடியாத நிலையில் பயிர்கள் சேதமடைந்து வருகிறது. இதற்கு  வேளாண்மைத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். பொறி வைத்து எலி பிடிக்கும் கணபதிபாளையத்தை சேர்ந்த தவசியப்பன் கூறும்போது, ‘‘ஒரு கிட்டிக்கு 5  ரூபாய் என்ற வீதம் ஒரு ஏக்கருக்கு 100 கிட்டி போடுவோம். இந்த தொழிலில் 20க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் நெல் பயிரிடும் காலத்தில் மட்டும் இந்த  வேலை கிடைக்கும். கிட்டி போடும் பணியில் 40 ஆண்டுகளாக உள்ள நிலையில் கிட்டியில் அவ்வப்போது பாம்புகளும் சிக்கும். ஒரு நாளைக்கு 100 கிட்டி போட்டால் 10 முதல் 40 எலி வரை பிடிபடும்’’ என்றார்….

The post விவசாயிகளுக்கு தோள் கொடுப்பதற்காக கிட்டி பொறி வைத்து எலி வேட்டையில் கலக்கும் தொழிலாளி: ஒரு எலிக்கு 5 ரூபாய் வசூல் appeared first on Dinakaran.

Tags : Gobi ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு