×

சிண்டிகேட் அமைத்து டீலரை முடிவு செய்த அதிகாரிகள் கிலியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஆண்டி யூனியனில் அதிகாரிகள் ேபாராட்டத்துக்கு தயாராகிறார்களாமே… என்ன காரணமாம்…’’ என்று பின்னணியை விசாரித்தார் பீட்டர் மாமா.‘‘ஹனிபீ மாவட்டத்தின் ‘ஆண்டி’யில் துவங்கும் யூனியனில் அரசனின் பெயரில் பாதியை கொண்டவர் தலைவராக இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இலைக்கட்சி சார்பில் நின்று, திமுகவில் நிறுத்தப்பட்ட தன் சொந்த அண்ணனையே எதிர்த்து தோல்வி கண்டவர். முந்தைய 2019ல் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தனது ‘அண்ணனுக்கு’ எதிராக களமிறங்கி தோற்றுப்போனார். ஆட்சி மாறினாலும், காட்சி மாறாத கதையாக இப்போதைய ‘யூனியன் தலைமை’ பதவியை கையில் வைத்துக்கொண்டு, அதிகாரிகளை கண்டபடி தனக்குச் சாதகமாக நடக்கும்படி ஆட்டிப்படைத்து வருகிறாராம். ‘தேர்தல்ல உள்ளூர் வாக்குகளை அதிகம் வாங்கினவன் நான். அதை அப்படி செய், இதை இப்படி செய்’ என அத்தனை காரியத்திலும் தனக்குச் சாதகமாகச் செயல்படச் சொல்கிறாராம். யூனியன் அதிகாரிகளோ, ‘எந்த காரியத்தையும் பொதுவாக செய்ய முடியல. ஆளுங்கட்சியினரே அமைதியா இருக்கும்போது, இலை கட்சியை சேர்ந்த இவரு அதிகாரம் பண்றாரே’ என்ற கொந்தளிப்பில் இருக்காங்களாம். மேலும், இந்த அதிகார துஷ்பிரயோகத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், போராட்டத்தில் குதிப்போம் என்று உயரதிகாரிகளிடம் கூறி வருகிறார்களாம். இங்கே விரைவில் தம்பியானவரை எதிர்த்து அதிகாரிகள் மட்டத்தில் ஒரு போராட்ட அறிவிப்பும் வெளிவர இருக்காம்… அதிகார அத்துமீறல்தான் போராட்டத்தின் பின்னணி என்கிறார்கள்…’’ என்றார்  விக்கியானந்தா.‘‘கட்சி கை கழுவியதால் கை நீட்டி கரைபடிந்த இலைகட்சி பிரமுகர் தலைமறைவாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராமே.. உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சி ஆட்சியில கிரிவலம் மாவட்டம் வாசி தொகுதியைச் சேர்ந்த, இலை கட்சியோட இளைஞர் அணியில, பெயரின் முடிவில் குறும்புக்கார கடவுளின் ெபயரைக் கொண்ட ஒருத்தர் டிஸ்ட்டிரிக் செக்ரட்ரியாக இருக்காராம். இவர், தெள் ஆறு ஒன்றியத்துல இருக்குற ஒரு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பிரசிடெண்டாவும் இருக்காராம். இவர், இலை ஆட்சியில இருக்குறப்ப, பல பேர் கிட்ட ேபங்க் லோன், அரசு வேலை வாங்கித்தருவதாக கை நீட்டி லட்சங்களை வாங்கிட்டாராம். இப்ப பணத்தை கொடுத்தவங்க வேலை கிடைக்காததால, டிஸ்ட்ரிக் செக்ரட்ரியை வலை வீசி தேடி வர்றாங்களாம். இதில் தெள் ஆற்றை சேர்ந்த ஒருத்தர், டிஸ்ட்ரிக் செக்ரட்ரியை பார்த்தால் மரத்தில் கட்டி வைத்து வசூல் செய்வேன்னு ஆவேசமாக சொல்லியிருக்காரு போல, இதனால பயந்துபோனவரு, கடந்த 2 மாசமா, அண்டை மாநிலத்துல தஞ்சம் புகுந்து தலைமறைவாயிட்டாராம். வாசி தொகுதியில இப்ப இலைகட்சி பிரமுகர் தலைமறைவு மேட்டர் தான் ஹாட் டாப்பிக்கா பேசப்படுதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தமிழை சரியாக புரிந்து ெகாள்ளாத அதிகாரியால ஊழியர் பட்ட அவஸ்தை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அல்வா  மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் மணியான ஒரு செக்கிங் ஊழியருக்கு  அவரது மேலதிகாரி டோஸ் விட்டுள்ளார். அவர் செய்த தவறு தான் என்ன என்பதை  கேட்டால் தான் திகைப்பாக இருக்கிறது. அந்த மணியான ஊழியர், கடந்த வாரம் ஒரு  முகூர்த்த நாளன்று ஓட்டுநர், நடத்துனர்கள் விடுப்பை தவிர்த்து பணிக்கு வர  வேண்டும் என தகவல் பலகையில் எழுதி, அதன் கீழ் ‘இவண்’ கிளை மேலாளர் என்று  குறிப்பிட்டாராம். இதனை தவறாக புரிந்து கொண்ட அல்வா மாவட்டத்தின் புனித  நதியின் பெயரைக் கொண்ட விஜயமான கிளை மேலாளர், ‘இவண்’ என்று என்னை மரியாதை  குறைவாக சித்தரித்து எழுதி உள்ளாயா என விவகாரத்தை கிளப்பி, தகாதவார்த்தையால திட்டினாராம். உயர் அதிகாரியின் இந்த ஏக போக பாய்ச்சல்,  போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  மரியாதைக்காக உயர் அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டது குற்றமா, ‘இவன்’ என்று எழுதி இருந்தால் தப்பு.. ‘இவண்’   என்ற வார்த்தை தப்பான வார்த்தை இல்லையே.. இந்த விவகாரத்தை நோட்டீஸ் போர்டில் எழுதிவைத்த தொழிற்சங்கத்தினர் தற்போது  இணையத்திலும் பரப்பி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘டெல்லியில் சொல்லி உங்களை துளைத்தெடுக்கிறேன்னு சொன்ன அரசியல்வாதியால அரண்டு போன அதிகாரிகள் பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை  அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் பெட்ரோலிய  பொருட்கள் விநியோகஸ்தர் (டீலர்) தேர்வுக்கான குலுக்கல் நிகழ்ச்சி  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், பார்வையாளராக பங்கேற்க, கோவை தொகுதியின் மக்கள் பிரதிநிதிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதை ஏற்று அவர் நேற்று  அங்கு சென்றார். ஆனால், திட்டமிட்டபடி, இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத்  பெட்ரோலியம் நிறுவனம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள்  யாரும் அங்கு வரவில்லை. எம்.பி. பி.ஆர்.நடராஜன் மற்றும் மாவட்ட வருவாய்துறை  அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தனர். அதன்பிறகு வந்த எண்ணெய்  நிறுவன அதிகாரிகள், கண்துடைப்புக்காக குலுக்கல் நடத்தினர். ஆனால், யார்  யாரை டீலராக தேர்வு செய்ய வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்துவிட்டனர்.  நியாயமான முறையில் இத்தேர்வு நடக்காத காரணத்தால் மக்கள் பிரதிநிதியானவர்  மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கடுப்பாகிப்போயினர். உடனடியாக அரங்கை  விட்டு வெளியேறி சென்றுவிட்டனர். அலட்சியமாக செயல்படும் எண்ணெய் நிறுவன  அதிகாரிகள் பற்றி, டெல்லியில் புகார் செய்வேன் என எம்.பி. ஆக்ரோஷமா  கூறிவிட்டு சென்றதால், அதிகாரிகள் வெலவெலத்துப் போயினர்… டெல்லியில சொல்லி நம்ம சட்டையை கழட்டிடிவாங்களோ என்ற பயத்தில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post சிண்டிகேட் அமைத்து டீலரை முடிவு செய்த அதிகாரிகள் கிலியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Gili ,Andi Union ,Andi ,Honeybee ,
× RELATED வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை...