சென்னை: இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிப் படங்களுக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்து வரும் சாம் சி.எஸ்., தற்போது பாடல்கள் எழுதுவது, பின்னணி பாடுவது, புத்தகம் எழுதுவது என்று தன்னை மிகவும் பிசியாக வைத்துள்ளார். அவரது இசையில் ‘ரெட்ட தல’ என்ற அருண் விஜய் நடித்த படமும், ‘விருஷபா’ என்ற மோகன்லால் நடித்த பான் இந்தியா படமும் நாளை (25ம் தேதி) திரைக்கு வருகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது:
இரட்டை வேடங்களில் அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ என்ற படத்துக்காக, இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு கடினமாக உழைத்திருக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும். தனுஷ் பாடியுள்ள ஒரு பாடல் வைரலாகி விட்டது. அருண் விஜய் நடித்துள்ள இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்துள்ளேன்.
சித்தி இத்னானியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ‘சர்தார் 2’, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், கன்னடத்தில் ஒரு படம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன், கங்கனா ரனவத் நடிக்கும் பான் இந்தியா படம் உள்பட சுமார் 15 படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். இசைத்துறையில் ஏஐ டெக்னாலஜி அதிக ஆதிக்கம் செலுத்திவருகிறது.
அது ஒன்றும் தவறு இல்லை. அதனால் இசை அழிந்துவிடாது. ‘மகாவதார் நரசிம்மா’ என்ற பான் இந்தியா அனிமேஷன் படத்துக்கு நான் இசை அமைத்த பின்பு, நிறைய பக்தி படங்களுக்கு இசை அமைக்க வாய்ப்புகள் வருகிறது. ஐயப்பன் பாடல் ஒன்றை எழுதி இசை அமைத்துள்ளேன். என்னை நடிக்க கேட்கிறார்கள். தற்போது அதில் எனக்கு ஆர்வம் இல்லை.
