தென்னிந்திய படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சஞ்சய் தத் அறிவிப்பு

பெங்களூரு: கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் 4வது படம், ‘கேடி-தி டெவில்’. முதல்முறையாக கர்நாடகா பின்னணியில் உருவாகும் பான் இந்தியா படமான இதில் துருவா சர்ஜா ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் பிரேம், அவரது மனைவி நடிகை ரக்‌ஷிதா, இதன் தயாரிப்பாளர் கே.வி.என் மற்றும் சுப்ரித், இசை அமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா கலந்துகொண்டனர். டீசரின் தமிழ்ப் பதிப்புக்கு விஜய் சேதுபதி, இந்திக்கு சஞ்சய் தத், மலையாளத்துக்கு மோகன்லால், கன்னடத்துக்கு இயக்குனர் பிரேம் குரல் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சஞ்சய் தத் பேசுகையில், ‘இந்தப் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன். துருவா மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். ‘கேஜிஎஃப் 2’ படம் என்னை அனைத்து ரசிகர்களின் மனதில் கொண்டு போய் சேர்த்துள்ளது. ‘கேடி-தி டெவில்’ டீசர் என்னை பிரமிக்க வைத்துள்ளது’ என்றார். இயக்குனர் பிரேம் பேசும் போது, ‘காளிதாசா என்ற பெயரின் சுருக்கம்தான், கேடி. எங்கெல்லாம் நல்லது இருக்கிறதோ அங்கே கெட்டதும் இருக்கும். ராமர் இருந்தபோது ராவணனும் இருந்தான். இந்தப் படம் ரத்தம் தோய்ந்த ஒரு கதை மட்டுமல்ல, காதல் மற்றும் அறம் கலந்த கதை. குடும்பத்தினரும் பார்த்து ரசிக்கலாம். ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும்’ என்றார்.