×

2 வருடம் சினிமாவுக்கு ஓய்வு: அஜித் திடீர் முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: துணிவு படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்குகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் அஜித் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படமாக விக்னேஷ் சிவன் இயக்கும் ஆக்‌ஷன் திரில்லர் கதையில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்த படத்தை முடித்துவிட்டு, சினிமாவுக்கு பிரேக் தர அஜித் முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி 2023ம் ஆண்டு ஜூலை முதல் 2025ம் ஆண்டு மார்ச் வரை எந்த படத்திலும் நடிக்கப்போவதில்லை என அஜித் முடிவு செய்துள்ளார். இந்த சமயத்தில் அவர் உலகம் முழுவதும் பைக் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.  அவரும் மற்ற இரண்டு பைக்கர்களும் இணைந்து 7 கண்டங்கள் மற்றும் 60 நாடுகளை உள்ளடக்கிய பைக் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஒன்றரை ஆண்டுகள் செலவழிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு சென்னை திரும்பி, வீட்டில் ஓய்வெடுப்பார். பின்னர் 2025ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில்தான் தனது புதிய படத்தை பற்றி அஜித் அறிவிப்பார். அஜித்தின் இந்த முடிவை பற்றி அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Ajith ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...