×

இந்தியாவில் வெப்பம், குளிரால் ஆண்டுக்கு 7.4 லட்சம் பேர் பலி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் அசாதாரண வெப்பம் மற்றும் குளிரால் ஆண்டுதோறும் 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை இறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மோனாஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான சர்வதேச குழுவினர், பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த குழுவானது உலகம் முழுவதும் சீதோஷண நிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்த விவரங்களை சேகரித்தன. உலக வெப்பமயமாதல் 0.26 டிகிரி செல்சியஸ் அதிகரித்த கடந்த 2000 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 5 கண்டங்களில் 43 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவுகள் கடந்த புதனன்று லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. இதில் கூறியிருப்பதாவது: கடந்த 2000 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அனைத்து நாடுகளிலும் கடும் வெப்பநிலை மாறுபாடு காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளது. உலக வெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் அசாதாரண குளிர் சீதோஷண நிலை காரணமாக 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஆண்டுதோறும் ஏற்பட்ட 83 ஆயிரத்து 700 இறப்புக்கள் அதிக வெப்பத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது. உலகளவில் ஆண்டுதோறும் 9.4 சதவீத இறப்புக்கள் அதிகப்படியான குளிர் மற்றும் வெப்பத்தினால் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post இந்தியாவில் வெப்பம், குளிரால் ஆண்டுக்கு 7.4 லட்சம் பேர் பலி: ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...