×

வீட்ல விசேஷம் - விமர்சனம்

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ புராஜெக்ட் தயாரிப்பில் ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி,சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி , கே.பி.ஏ.சி.லலிதா , உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் வீட்ல விசேஷம். படத்துக்கு இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.

2018 இல் இந்தியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'பாதாய் ஹோ'. இப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் இந்த வீட்ல விசேஷம். இந்தி படத்தின் அளவிற்கு இப்படம் தமிழ் ரசிகர்களை திருப்தி படுத்தியதா இல்லையா பார்க்கலாம்.

டிடிஆர் ஆக வேலை பார்க்கும் உன்னி கிருஷ்ணன் (சத்யராஜ்) , அவருக்கு மனைவியாக கிருஷ்ணவேணி (ஊர்வசி). இருவருக்கும் இரண்டு மகன்கள் அதில் மூத்த மகனாக இளங்கோ (ஆர் ஜே பாலாஜி). 50 வயதிற்கு மேல் கருத்தரிக்கும் கிருஷ்ணவேணி அதை வீட்டிலும் தன் மகன்களிடமும் சொல்ல முடியாமல் பரிதவிக்கும் தம்பதியர் எப்படி சமாளித்தார்கள் முடிவு என்ன என்பது மீதிக் கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் சத்யராஜ், ஊர்வசி இருவரும்தான் . போட்டி போட்டுக் கொண்டு நடிப்பில் அசத்துகிறார்கள். குறிப்பாக ஊர்வசி சில இடங்களில் கணகலங்க வைப்பது மட்டுமின்றி கைதட்டி ரசிக்கும் படி கலகலப்பும் கொடுக்கிறார். ஒரு பக்கம் மாமியார் இன்னொரு பக்கம் பிள்ளைகள் என இருவரையும் சமாளித்து அமைதி காக்கும் இடத்தில் நம்மையும் மீறி கைதட்டல் பெறுகிறார்.

சத்யராஜ் அம்மாவுக்கு செல்லப் பிள்ளையாக , கண்டிக்கும் அப்பாவாக , மனைவி , அம்மா இடையே மாட்டிக் கொண்டு தவிக்கும் குடும்பத் தலைவனாக என மாஸ் காட்டியிருக்கிறார்.

'25 வயசுல குழந்தை பெத்துக்கலைன்னா தப்பு, 50 வயசுல பெத்துக்கிட்டா தப்பு '

'50 வயசுல கூட ஒரு மனுஷன் விடாம தான் மனைவிய காதலிச்சா அது தப்பா?!'

இப்படி படம் நெடுக சத்யராஜ் மற்றும் ஊர்வசி படத்தை தாங்கி நிற்கிறார்கள். இவர்களுக்கு பக்கபலமாக கே.ஏ.பி.சி லலிதா. இவர்களுக்கிடையே ஹீரோவாகவும் இயக்குனராகவும் ஆர் ஜே பாலாஜி அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி. ஆர்ஜே பாலாஜி நடிப்பில் நிறையவே முன்னேற்றம் தெரிகிறது. இயக்குனராகவும் என்னதான் ரீமேக் படம் என்றாலும் தமிழுக்கு ஏகப்பட்ட மாற்றங்கள் செய்து நிறைய தமிழுக்கு சொந்தமான வார்த்தைகளைக் கலந்து படத்தை ஒரு முழு பேக்கேஜ் ஆக கொடுத்திருக்கிறார்கள் பாலாஜி & சரவணன் காம்போ.

அபர்ணாவின் நடிப்பும் அருமை. மாடர்ன் என்றால் என்ன என வகுபெடுக்கும் இடத்தில் நிச்சயம் இளம் பெண்கள் கைதட்டுவர்.

குழந்தைப்பேறு இன்று மிகப்பெரிய வியாபாரமாகி வரும் நிலையில் இந்த படத்தில் வரும் சில வசனங்களும் காட்சிகளும் பார்வையாளர்களை பெருமளவில் சிந்திக்கச் செய்திருக்கிறது. மேலும் காதலுக்கு வயது என்பது ஒரு தடை இல்லை என்பதையும் கணவன் மனைவி உறவின் பலத்தையும் மிகவும் ஆழமாக சொல்லிச் செல்கிறது.

கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில் கல்யாண பாட்டு காட்சியில் கலர்ஃபுல்லாகவும், வீட்டின் எதார்த்தம், என படத்தின் குடும்ப சூழலுக்கும் பெரும் அளவில் கைகொடுத்திருக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் 'நூறு கோவில் தேவையில்லை' பாடல் படம் முடிந்த பிறகும் கூட காதுகளுக்கு இனிமையாக நிறைகிறது. உணர்வுபூர்வமான காட்சிகளில் கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை இன்னொரு கேரக்டராகவே செயல்படுகிறது.

மொத்தத்தில் இன்று விவாகரத்தும் குழந்தை பெறும் மிகப்பெரும் வியாபாரமாகி கொண்டிருக்கும் சூழலில் 'வீட்ல விசேஷம்' படம் அதன் முக்கியத்துவத்தை எளிமையாகவும் எதார்த்தமாகவும் எடுத்துவைத்து கலர்ஃபுல்லாக பாடம் எடுத்திருக்கிறது.

Tags :
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...