×

வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.14 கோடி சொத்து வாங்கி குவிப்பு சுற்றுச்சூழல்துறை அதிகாரி பாண்டியன், மனைவி மீது வழக்கு- லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

சென்னை :  சென்னை பனகல் மாளிகையில், சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர் பாண்டியன். இவர் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்க பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக தொடர் புகார்கள் வந்தது. அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில் கூடுதல் எஸ்பி லாவண்யா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படையினர் கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூடுதல் எஸ்பி லாவண்யா தலைமையில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து ரூ.89 ஆயிரம் ரொக்கம், வங்கி கணக்கில் இருந்து ரூ.38 லட்சத்து 66 ஆயிரம் பணம், வீட்டில் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சம் ரொக்கம், 3 கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி மற்றும் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாண்டியனை அதிரடியாக கைது செய்தனர். மேலும், சுற்றுச்சூழல் துறை  கண்காணிப்பாளர் பதவியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், பாண்டியனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்கள், பணம் மற்றும் நகைகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முறையாக கணக்காய்வு செய்தனர். அதில், அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனது வருமானத்துக்க அதிகமாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல இடங்களில் அசையா சொத்துக்களை பாண்டியன் தனது மனைவி லதா மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கி குவித்து இருந்ததும் தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் எழை குடும்பத்தில் பிறந்த பாண்டியன் பணியில் சேர்ந்த 20 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது.அதில் 2013ம் ஆண்டு அவரது வருமானம் 21 லட்சத்து 25 ஆயிரத்து 350 மட்டுமே. அதன்பின்னர் 1.1.2013 முதல் 31.12.2020 காலக்கட்டத்தில் அதாவது 8 ஆண்டுகளில் மட்டும் அவரது வருமானம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ரொக்க பணம், தங்க நகைகள், வைரங்கள், நிலங்கள், வீடுகள், உறவினர்கள் பெயரில் வாங்கி குவித்த நிலங்கள்  என ₹ 7.14  கோடி என்பது தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக லஞ்ச ஒழிப்பு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த சொத்துக்களை கண்டுபிடித்துள்ளனர். அதில், பாண்டியன் கோட்டையில் உள்ள விஐபிக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் பணிகளை மட்டுமே செய்து வந்தார். அதில் இவ்வளவு பணம் சிக்கியுள்ளது. லஞ்சம் வாங்க தூண்டிய கோட்டையில் உள்ள விஐபிக்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வளவு வாங்கியிருப்பார்கள் என்பது அதிர்ச்சி அளிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விவகாரத்தில் கோட்டையில் உள்ள ஒரு அமைச்சரின் பெயரும் அடிபடத் தொடங்கியதால், அப்போது இருந்த உயர் அதிகாரி ஒருவர், ஆளும் கட்சியின் பெயர் கெடாமல் வேலை செய்யும்படி தனிப்படை கூடுதல் எஸ்பி லாவண்யாவை அழைத்து எச்சரித்துள்ளார். பின்னர் தனிப்படையினருக்கு வேறு பல வேலைகளும் ஒதுக்கப்பட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முன்னாள் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் மீது வருமானத்துக்க அதிகமாக சொத்து குவித்தது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் கடந்த 30ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். இதற்கிடையே வழக்கு தொடர்பாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள முன்னாள் சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் கடந்த 2ம் தேதி மீண்டும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், பாண்டியனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என ரூ.7.14 கோடி மதிப்பிலான சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடக்கி உள்ளது. இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பாண்டியன் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோரை சொத்துக்குவிப்பு வழக்கில் கைது ெசய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளையும் அவர்கள் தற்போது ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் ஒருவர் தனது வருமானத்தை மீறி ரூ.23.34 கோடி லஞ்சமாக சம்பாதித்து சொத்துக்கள் சேர்த்தது தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாண்யனிடம் விசாரணை நடத்தி, அவர் லஞ்சம் வாங்கிக்கொடுத்த ஒரு முக்கிய அமைச்சர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுமா என்ற பரபரப்பும் எழுந்துள்ளது….

The post வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.14 கோடி சொத்து வாங்கி குவிப்பு சுற்றுச்சூழல்துறை அதிகாரி பாண்டியன், மனைவி மீது வழக்கு- லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Environment Department ,Pandian ,Chennai ,Panagal Palace, Chennai ,Dinakaran ,
× RELATED தொழிலாளியை தாக்கிய ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வழக்கு