×

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவுநோய் தாக்கம் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தபின் தடுப்பூசி போட வேண்டும்: கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் அரசு நகர் நல மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தொற்று படிப்படியாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் மூலம் தொற்று முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா தொற்றை குறைத்து, இறப்பை தடுப்பதற்கான முக்கிய ஆயுதமாக தடுப்பூசி பயன்படுகிறது. சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 18 வயது மேல் உள்ளவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 8 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு, இன்று (நேற்று) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையை விட 2ம் அலையில் கர்ப்பிணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். கர்ப்பிணிகளின் இறப்பு விகிதம் அதிகரித்ததோடு குறை பிரசவம், கருச்சிதைவு, குழந்தை கருவில் இருத்தல் அகிய சிக்கல்கள் அதிகளவில் ஏற்படுகிறது. இதனை தடுக்க கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி மிகவும் அவசியம் கருத்தரித்தது முதல் பிரசவிக்கும் வரை கர்ப்பக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் போட்டு கொள்ளலாம். கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்திய 28 நாட்களுக்கு பிறகும் கோவிஷீஸ்ட் தடுப்பூசி முதல் தவணை செலுத்திய 84 நாட்களுக்கு பிறகும் 2வது தவணை தடுப்பூசி போட்டு கொள்ளலாம். பிரசவிக்கும் தருவாயில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட தாய்மார்கள் பிரசவித்த பின்னர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவுநோய் ஆகிய நோய்தாக்கம் உள்ளவர்கள் கூடுதல் கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகள் உயர் சிகிச்சை மையங்களான அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தகுந்த பரிசோதனைக்கு பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவரையில் மாவட்டத்தில் 2,09,048 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியதன் பேரில் கர்ப்பிணிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை கர்ப்பிணிகள் தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்….

The post உயர் ரத்த அழுத்தம், நீரிழிவுநோய் தாக்கம் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தபின் தடுப்பூசி போட வேண்டும்: கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Corona Vaccination ,Small Kanchipuram Government Town Health Center ,Kanchipuram Corporation ,Aarthi ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...