×

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அமைச்சரவை இன்று மாற்றம்? 20க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு; தேர்வு செய்யப்பட்டவர்கள் டெல்லி விரைந்தனர்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2வது முறையாக பதவியேற்றப் பிறகு முதல் முறையாக, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், பதவியேற்பு விழா இன்று மாலை நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில், 20க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள் நேற்றே அவசரமாக டெல்லி விரைந்தனர். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொடர்ந்து 2வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அதிலிருந்து கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சில கூட்டணி கட்சிகள் விலகியதாலும், அமைச்சர்கள் காலமானதாலும் சில இடங்கள் காலியாகின. அந்த துறைகளையும் கூடுதல் பொறுப்பாக தற்போதுள்ள அமைச்சர்களே கவனித்து வருவதால் சிலருக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.எனவே, அடுத்த ஆண்டு உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடக்க உள்ளதை ஒட்டியும், அரசு நிர்வாகத்திறனை மேம்படுத்தும் வகையிலும், ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜ தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோருடன் பல கட்ட ஆலோசனைகள் நடத்தி உள்ளார். இந்நிலையில், ஒன்றிய அமைச்சரவையில் புதிதாக இடம் பெறும் அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப, பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் என கருதப்படுபவர்கள் நேற்று அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இம்முறை ஒன்றிய அமைச்சரவையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இடம் பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக சமீபத்தில் நிதிஷ்குமார் டெல்லி சென்று திரும்பி உள்ளார். 2வது முறையாக மத்தியில் பாஜ ஆட்சிப் பொறுப்பேற்ற போது, நிதிஷ் கேட்ட எண்ணிக்கையில் அமைச்சர் பதவி தராததால் அவரது கட்சி அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இம்முறை நிதிஷ்குமார் தனக்கு 4 அமைச்சர்கள் வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதே போல், மாநிலங்களவை எம்பி.யான ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசிலிருந்து 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் பாஜவுக்கு தாவி மபி.யில் பாஜ ஆட்சி மலர உதவியவர். அவருக்கு இம்முறை அமைச்சர் பதவி தரப்பட உள்ளது. இதனால் டெல்லியில் இருந்து நேற்று அவசர அழைப்பு வந்ததும் மபி.யின் தேவாசில் தனது சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு, உஜ்ஜைனி ஜோதிர்லிங்க கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து விட்டு, அவர் டெல்லிக்கு வந்தடைந்துள்ளார். அசாம் முன்னாள் முதல்வராக சர்பானந்தா சோனாவாலும் நேற்று டெல்லி வந்தடைந்தார். இம்முறை அமைச்சரவை விரிவாக்கத்தில் மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த மதுவா சமூகத்தை சேர்ந்த சந்தானு தாகூர், ராஜ்பன்ஷி சமூகத்தை சேர்ந்த நிஷித் பிரமானிக் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது. உபி.யில் பாஜ.வின் முக்கிய கூட்டணியான அப்னா தல் கட்சியின் அனுப்ரியா படேலுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம்.மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து காங்கிரசுக்கு தாவி அங்கிருந்து பாஜ.வில் ஐக்கியமான நாராயண் ரானேவும் அமைச்சர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி, பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரான பசுபதி பராஸ் லோக் ஜனசக்தி கட்சி பிளவுபடுத்தி உள்ளார். அவரது தலைமையில் 6 எம்பி.க்கள் சிராக் பஸ்வானை நிராயுதபாணியாக்கி உள்ளனர். இதற்கு பிரதிபலனாக பசுபதி பராஸ் தரப்புக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக் ஜனசக்தி கட்சியினரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே, நேற்று மாலை பாஜ தேசிய தலைவர் நட்டா வீட்டில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரவை விரிவாக்க இறுதிகட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக அதிகம் வாய்ப்புள்ளது. இன்று மாலை பதவியேற்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.* சரியாக செயல்படாத அமைச்சர்களுக்கு கல்தாஒன்றிய அமைச்சரவை மாற்றத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் சரியாக செயல்படாத அமைச்சர்கள், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும், சுகாதார உள்கட்டமைப்பை பலப்படுத்தவும், கல்வித்துறையை வலுப்படுத்தவும் முக்கியத்துவம் தரப்பட்டு அதற்கு தகுதியான அமைச்சர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. * மோடிக்கு சிராக் கடிதம்லோக் ஜனசக்தி கட்சிக்கான அமைச்சர் பதவியை தனது சித்தப்பாவான பசுபதி பராசுக்கு வழங்கக் கூடாது என சிராக் பஸ்வான் போர்க்கொடி தூக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதி உள்ளார். கட்சியில் இல்லாத நபரான பசுபதி பராசுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி தந்தால் நீதிமன்றத்தை நாட போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்….

The post இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அமைச்சரவை இன்று மாற்றம்? 20க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு; தேர்வு செய்யப்பட்டவர்கள் டெல்லி விரைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Delhi ,New Delhi ,Union government ,Modi ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு