×

குளச்சலில் குவிந்த நெத்திலி மீன்கள் : மீன் எண்ணெய் ஆலைகளுக்கு வாங்கி சென்றனர்

குளச்சல்  :  குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும்  மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து வருவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய சுறா, இறால், கேரை, கணவாய் மற்றும் செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைக்கும். தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு  தடை அமலில் இருந்து வருகிறது. இந்த தடை வரும் 31 ம் தேதி நள்ளிரவுடன் முடிகிறது. இதனால் பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மட்டுமே தொழில் செய்து வருகின்றன. கடந்த இரண்டு வாரமாக குளச்சல் கடல் பகுதியில் நெத்திலி, சாளை மீன்களே கிடைத்து வருகின்றன. நேற்று குளச்சல் மீனவர்களின் கட்டுமரங்களில் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு குட்டை நெத்திலி மீன் ₹800 க்கும் குறைவாக விற்பனையானது. இது கடந்த சில நாட்கள் விலையை விட மிகவும் குறைவு. முன்பு ஒரு குட்டை நெத்திலி மீன் ₹2500 முதல் ₹4 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. வியாபாரிகள் இந்த மீன்களை போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். சில மீனவர்கள் நெத்திலி மீன்களை கருவாட்டிற்காக கடற்கரை மணற்பரப்பு, பாலம், துறைமுக வளாகம் ஆகிய பகுதியில் பரப்பி உலர வைத்தனர். இதுபோல் கோடிமுனை, வாணியக்குடி கிராமங்களிலும் நெத்திலி மீன்கள் அதிகம் கிடைத்தன. அதிகம் கிடைத்த நெத்திலி மீன்களை கருவாடு வியாபாரிகள் மற்றும்  வெளிமாவட்ட மீன் எண்ணெய் ஆலையினரும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்….

The post குளச்சலில் குவிந்த நெத்திலி மீன்கள் : மீன் எண்ணெய் ஆலைகளுக்கு வாங்கி சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,
× RELATED சேனம்விளையில் அரசு பஸ்களை சிறை பிடித்த 20 பேர் மீது வழக்கு