×

தீபாவளி பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு மந்தம்: கொரோனா காரணமாக நிறைய இருக்கைகள் காலி

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. கொரோனா தொற்றின் காரணமாக நிறைய இருக்கைகள் காலியாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களான மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், மும்பை, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு 56க்கும் மேற்பட்ட ரயில்களும், அதைப்போன்று எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை போன்ற பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், கழிப்பறை வசதிகள், விரைவாகவும் செல்ல முடியும் என்பதால் குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாட ரயில்களில் பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ரயிலில் பயணிக்க 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் நடைமுறை இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வமுடன் காத்திருப்பார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு முந்தைய நாளான 3ம் தேதி தொலைதூர ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த முறை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கினாலும் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் மதுரை நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி, செங்கோட்டை உட்பட தென்மாவட்ட ரயில்களின் இருக்கைகள் எதுவும் நிரம்பாமல் உள்ளது. வழக்கமாக, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்  என்பதால் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும்  முன்பதிவு செய்யப்பட்டு விடும். பல முக்கிய ஊர்களுக்கு செல்லும்  ரயில்களில் டிக்கெட்டுகள்  அனைத்தும் விற்று தீர்ந்து விடும். டிக்கெட் கவுண்டர்களில்  நீண்ட வரிசையில் காத்திருந்து   பலர் டிக்கெட்  கிடைக்காமல் ஏமாற்றம் அடைவதும் வாடிக்கை ஆகும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நேற்று முன்பதிவு  தொடங்கி பல மணி நேரம் ஆகியும் மக்கள் மெதுவாக தான் டிக்கெட் முன்பதிவு  செய்தனர். தீபாவளி ரயில்  டிக்கெட் முன்பதிவில் போதிய அளவில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.கொரோனா பாதிப்பு தற்போது தான் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை, சென்னையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்களின் சொந்த ஊரில் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வரும் நிலையில் இன்னும் சென்னைக்கு வராததாலும், மூன்றாவது அலை அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரும் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதாலும் பொதுமக்கள் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் தான் வழக்கத்தை விட டிக்கெட் முன்பதிவு மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்களில் 200க்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்….

The post தீபாவளி பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு மந்தம்: கொரோனா காரணமாக நிறைய இருக்கைகள் காலி appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Diwali festival ,corona ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...