×

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

நெல்லை :  நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் பஸ் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில் குழந்தைகளோடு பயணிகள் பொழுதுபோக்கும் வகையில் பல்வேறு அம்சங்களோடு அறிவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதை செப்டம்பரில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் குறைவாக உள்ளன. பொதுமக்கள் குடும்பத்தோடு பொழுதை போக்க தியேட்டர்களை தவிர்த்து, மாவட்ட அறிவியல் மையம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பொழுதுபோக்கு அம்சங்களோடு கூடிய ‘ஸ்டெம் பார்க்’ என்னும் அறிவியல் பூங்கா அமைக்க நெல்லை மாநகராட்சி முடிவு செய்து, அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது. ரூ.10.50 லட்சம் ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் கடந்த சில தினங்களாக விரைவு படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு விளையாட்டுகள் மூலம் அறிவியலை கற்பிக்கும் வகையில் சயின்ஸ் டெக்னாலஜி இன்ஜினியரிங் மேக்ஸ் (எஸ்டிஇஎம்) பூங்கா உருவாக்கப்படுகிறது.  இப்பூங்காவில் இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் என அனைத்து அறிவியல் பாடங்கள் ெதாடர்பான கருவிகளும் இடம் பெற்றுள்ளன. கடலில் இருந்து சுனாமி வரும் கொந்தளிப்பு காட்சிகள், நியூட்டன் விதிகளில் கலர் டிஸ்குகள், பெரிஸ்கோப் மூலம் கலங்கரை விளக்கத்தை காணுதல், மியூசிக்கல் பைப், மூக்கில் முழு சக்தி கொண்ட பறவைகளின் காட்சிகள், மங்கல்யான், சந்திராயன் உள்ளிட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள், உலக வரைபடங்கள், குவிஆடி, குழி ஆடி உள்ளிட்ட கண்ணாடி பிம்பங்கள், ரோபர்ட் பூங்கா என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.அறிவியல் பூங்காவில் காணப்படும் ட்ரோன் ஏரியாவில், குழந்தைகள் ட்ரோன்களை இயக்கி பார்க்க முடியும். கொரோனா உள்ளிட்ட அச்சுறுத்தல் மிகுந்த இக்காலக்கட்டத்தில் ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிப்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது. நெல்லை புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் அறிவியல் பூங்காவில் இருந்து கணித பூங்காவிற்கு செல்வதற்கு படிக்கட்டு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பஸ்கள் செல்லும் சாலையை கடந்து செல்ல வேண்டியதிருப்பதால், அப்பகுதியில் நடைபாதை மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்களின் அறிவியல் முறைகளை வெளிக்கொணரும் வகையில் சூரிய கடிகாரம், பழங்கால அறிவியல் பொருட்களும் பூங்காவில் இடம் பெற்றுள்ளன. இன்னாவேஷன் கிளப் என்னும் பெயரில் மாணவர்கள் அமர்ந்து அறிவியலை தெரிந்து கொள்ள வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை சமீபத்தில் பார்வையிட்ட நெல்லை கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன், நெல்லை ஸ்மார்ட் சிட்டி நிர்வாக இயக்குநர் நாராயணன் நாயர் உள்ளிட்டோர் ஞாயிற்றுகிழமைகளிலும் பூங்கா பணிகளை நடத்திட கேட்டு கொண்டனர்.நெல்லை புதிய பஸ்நிலைய அறிவியல் பூங்காவில் 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள பணிகளும் தற்போது விரைவு பெற்றுள்ளதால் வரும் செப்டம்பர் மாதத்தில்,  அறிவியல் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. நெல்லை புதிய பஸ் நிலைய பணிகள் ஒரு பக்கம் நடந்தாலும், அதற்கு முன்பாகவே அறிவியல் பூங்காவை திறந்திட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லை மாநகராட்சியில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை உள்ளடக்கி எத்தனையோ பூங்காக்கள் இருப்பினும், அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு அறிவூட்டும் வகையில் அறிவியல் பூங்கா உருவாகி வருகிறது….

The post நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Paddy ,station ,Nella ,Nella Vaendankulam New Bus Station ,Paddy's new bus station ,
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு...