நாகர்கோவில்: நாகர்கோவில் காவல்கிணறு நான்கு வழிச்சாலை டிசம்பரில் நிறைவு பெறும் என அதிகாரிகள் கூறினர். குமரியில் காரோடு -வில்லுக்குறி(27 கி,மீ), வில்லுக்குறி- நாகர்கோவில் 12 கி,மீ, நாகர்கோவில் -கன்னியாகுமரி 14 கி.மீ, நாகர்கோவில்- காவல்கிணறு (பெருங்குடி) 16 கி.மீ. என ெமாத்தம் 69 கி.மீ தொலைவிற்கு ஒய் வடிவில் நான்கு வழிச்சாலை அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. தங்க நாற்கர சாலை என்ற பெயரில் முதன்முதலாக கன்னியாகுமரி ஜீரோ பாயின்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அடிக்கல் நாட்டினாலும், குமரியில் மட்டும், இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு, இழப்பீடு தொகை போன்ற காரணங்கள் முட்டுக் கட்டையாக நின்றது. கடந்த 2014ல் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்னர், அதில் இடம் பெற்ற கன்னியாகுமரி எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால், ஒரு வழியாக 2016ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. தற்போதும், நீதிமன்ற வழக்குகள், சுற்றுச் சூழல் அனுமதி, மண் பிரச்னை என பல முட்டுக்கட்டைகளை தாண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நாகர்கோவில் -காவல்கிணறு இடையே கடந்த 2018ம் ஆண்டே 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. எனினும் கோதண்டராமன் குளம் மற்றும் அதன் அருகே உள்ள ரயில்வே பாலம் ஆகிய இரண்டும் மட்டும் ரயில்வே மற்றும் வனத்துறை (பறவைகள் சரணாலயம் காரணமாக) அனுமதிக்காக இந்த பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து அனுமதிகளும் கிடைக்கப்பெற்று பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதுபற்றி திட்டஇயக்குநர் வேல்ராஜிடம் கேட்டபோது, கோதண்டராமன்குளம் பாலம் மற்றும் ரயில்வே மேம்பால பணி என இரு பாலப்பணிகளும் முடிவடைந்து விட்டால், போக்குவரத்திற்கு இச்சாலை திறக்கப்படும். செப்டம்பருக்குள் இந்த பணிகள் நிறைவடைந்து, டிசம்பரில் இச்சாலை பயன்பாட்டிற்கு வந்து விடும் என்றார்.’இதர சாலைகளின் நிலை’* கன்னியாகுமரி -நாகர்கோவில் சாலை பணிகளும் முடிவடைந்து விட்டன. இதில் ரயில்வே மேம்பால பணிகள் மட்டும் பாக்கி உள்ளது. இதுபோல், குளங்களில் பாலம் அமைக்க வேண்டியது உள்ளது.* நாகர்கோவில்- வில்லுக்குறி இடையே பழையாறு, கோயில்கள் பகுதியில் பாலங்கள் அமைக்கப்பட்டு விட்டன. இவற்றை இணைக்க மண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு பணிகள் நிற்கின்றன. * வில்லுக்குறி -காரோடு இடையே 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. ஆனால், பள்ளியாடி பகுதியில் வழிபாட்டு தல நிலமெடுப்பதில் வழக்கு காரணமாக 2 கி.மீ தொலைவிற்கு இன்னமும் சாலை பணிகள் நடக்கவில்லை. இதுபோல் நட்டாலம் பகுதியிலும் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது.’வேறு நிறுவனத்திற்கு டெண்டர்’நான்கு வழிச்சாலை பணியை எல்.அன்ட் டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது, பசுமை தீர்ப்பாயம் உத்தரவு காரணமாக அமைக்கப்படும் பாலங்களுக்கான பணியை மும்பையை சேர்ந்த ஷிண்டே நிறுவனம் எடுத்துள்ளது. இவர்கள் விரைவில் பணிகளை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது. மண் பிரச்னை மற்றும் வழக்குகள் காரணமாக 4 வழிச்சாலை பணிகள் முற்றிலும் நிறைவடைய 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்ற தகவலும் உலா வருகிறது. இது 4 வழிச்சாலை பயன்பாட்டை எதிர்பார்த்து இருக்கும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது….
The post நாகர்கோவில் – காவல்கிணறு 4 வழிச்சாலை டிசம்பரில் நிறைவு: 2 பாலம் மட்டுமே பாக்கி appeared first on Dinakaran.