×

பம்மல் பிரதான சாலையில் திறந்த நிலையில் கிடக்கும் மின் பெட்டி, வயர்கள்: பொதுமக்கள் அச்சம்

பல்லாவரம்: பம்மல் நகராட்சி, அம்பேத்கர் பிரதான சாலையில் ஆபத்தான நிலையில் காணப்படும் உயரழுத்த மின் கம்பத்தின் கீழ் பகுதியை முறையாக மூடி, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் பழைய பம்மல் நகராட்சி அலுவலகம் உள்ள டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஆபத்தான நிலையில் உயரழுத்த மின் கம்பத்தின் கீழ் பகுதியில் உள்ள பியூஸ், மின் வயர்கள் அனைத்தும் திறந்த நிலையில் காணப்படுகிறது. இப்படி காட்சியளிக்கும் மின்கம்பம் அருகே நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலையே உள்ளது. இந்த உயரழுத்த மின்கம்பம் அருகிலேயே பம்மலில் இருந்து பொழிச்சலூர், கவுல்பஜார், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் செல்வதற்கு பேருந்து நிறுத்தம், ஆட்டோ ஸ்டாண்ட் ஆகியவை உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பேருந்து மற்றும் ஆட்டோக்களில் சென்று வருகின்றனர். அத்துடன் உயரழுத்த மின்கம்பம் அருகிலேயே புகழ்பெற்ற பள்ளியும் அமைந்துள்ளது. பள்ளி மாணவர்களும் இந்த வழியாகத்தான் செல்கின்றனர். அதுமட்டுமின்றி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதி மண்டல அலுவலகம், பழைய பம்மல் நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து வரி, குடிநீர் வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு என்று பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதனால், எப்பொழுதும் டாக்டர் அம்பேத்கர் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். ஏற்கனவே, சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது.‌ இந்நிலையில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இந்த பிரதான சாலையில் ஆபத்தான நிலையில் உயரழுத்த மின்கம்பம் காட்சி அளிப்பதால், அதன் அருகில் செல்வதை தவிர்க்கும் பொருட்டு, பாதசாரிகள் சாலையில் இறங்கி நடக்க முற்படும்போது, விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மக்களை காக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், பம்மல் மின்வாரிய அலுவலகம் மட்டும் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, பெரும் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள், திறந்த நிலையில் காணப்படும் உயரழுத்த மின் கம்பத்தின் கீழ் பகுதியை முறையாக மூடி, பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பம்மல் பிரதான சாலையில் திறந்த நிலையில் கிடக்கும் மின் பெட்டி, வயர்கள்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Pammel ,Pallavaram ,Pummel ,Municipality ,Ambedkar ,
× RELATED காரியம் ஆக வேண்டும் என்றால்...