லாஸ்ஏஞ்சல்ஸ்: டேனியல் கிரெய்க் 5வது முறையாக ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடித்துள்ள படம், ‘நோ டைம் டு டை’. இது ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வரிசையில் உருவான 25வது படம். இதுவே ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்கும் கடைசி படம் என்று டேனியல் கிரெய்க் அறிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இத்ரிஸ் எல்பா, டேனியல் கலூயா, ரிச்சர்ட் மேடன், டாம் ஹார்டி போன்றவர்களில் ஒருவர், அடுத்த ஜேம்ஸ்பாண்டாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. குறிப்பாக, டிசி காமிக்ஸ் படங்களில் சூப்பர்மேனாக நடித்து வரும் ஹென்றி கெவில் பெயர் உச்சரிக்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கம்: தற்போது நான் எதையும் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். என்னைவிட வயது குறைந்த நடிகரின் பெயரை தயாரிப்பாளர் பரிசீலனை செய்யலாம். இவ்விஷயத்தில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது என்றாலும், ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிப்பதை மகிழ்ச்சியாக நினைக்கிறேன்.