என் படத்தில் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள்: இயக்குனர் பா.ரஞ்சித் புகார்

சென்னை: ‘என் படங்களில் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு ெகாடுக்க மறுக்கிறார்கள்’ என்று இயக்குனர் பா.ரஞ்சித் புகார் கூறினார். சமுத்திரக்கனி, இனியா, மகேஸ்வரி நடித்துள்ள படம், ‘ரைட்டர்’. காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரியும் ஒருவரின் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இதை பா.ரஞ்சித் தயாரிக்க, அவரது உதவியாளர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், ‘சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ரைட்டர்’ படத்தின் கதை, தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாததாக இருக்கும்.

ரஞ்சித் படத்தில் பணியாற்றினால், இவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று பல இடங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, என் உதவி இயக்குனர்கள் வெளியிடங்களில் கதை சொல்ல செல்லும்போது, உங்கள் டைரக்டர் இப்படித்தான் பேசுவாராமே, இப்படித்தான் படத்தை எடுப்பீர்களாமே, நீங்களும் இப்படித்தான் பேசுவீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். என் படத்தில் நடிப்பவர்களையும் என்னைச் சேர்ந்தவர்களாகவே யோசிக்க ஆரம்பித்து நிறையபேருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான உண்மை. என் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்ற அனைவரையும் வட்டமிடுகிறார்கள். இதனால் அவர்களை மதிக்கும் விஷயமே மிகவும் மோசமாக இருக்கிறது. இதை நினைத்து வேதனைப்படுகிறேன்’ என்றார்.

Related Stories: