கண் கலங்கிய சாய் பல்லவி

தமிழ்நாட்டைச் சேர்ந்த, சரளமாக தமிழ் பேசக்கூடிய, நிஜ டாக்டரான சாய் பல்லவிக்கு தமிழ்ப் படவுலகம் சரியாக கைகொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த அவர், மலையாளத்தில் நடித்துவிட்டு தெலுங்குக்கு சென்றார். அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றதால், அங்கு ராசியான நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். குறிப்பாக, அவரது நடிப்புக்கு ரசிகர்கள் கொடுக்கும் அதே வரவேற்பை அவரது அதிவேக நடனத்துக்கும் கொடுத்து கொண்டாடுகின்றனர். நானி நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள சாய் பல்லவி, ஐதராபாத்தில் நடந்த இப்படம் சம்பந்தமான விழாவில் மேடை ஏறியபோது ரசிகர்கள் அவரைப் பேசவிடவில்லை.

தொடர்ந்து பலத்த கரகோஷம் எழுப்பியும், விசிலடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள், இதற்கு முன்பு சாய் பல்லவி தெலுங்கில் நடித்த சில கேரக்டர்களின் பெயரைச் சொல்லி கூச்சலிட்டனர். இதனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சாய் பல்லவி, மேடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி ைகயெடுத்துக் கும்பிட்டு கண் கலங்கினார். பிறகு அழுதுகொண்டே அவர் பேசும்போது, ‘இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கும் ரசிகர்களுக்கு முன்னால் வந்து பெருமிதமாக நிற்க நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. என்னைவிட அழகான, திறமையான பலர் சினிமாவில் முன்னேற முயற்சித்து வருகின்றனர். சிலருக்கு மட்டுமே புகழ்பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்தவிதத்தில் நான் மிகப்பெரிய பாக்கியசாலி’ என்றார்.

Related Stories: