×

தேனிக்காரரின் ஒரே லெட்டர் மாங்கனி மாவட்டத்தையே சிரிக்க வைத்த கதையை சொல்கிறார் wiki யானந்தா

‘‘பதவி இல்லாவிட்டால் ஒரு மனிதனை என்ன பாடுபடுத்திவிடும் என்பது தேனிக்காரருக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும்போல…’’ என்று சிரித்தபடியே பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியின்  நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க சேலத்துக்காரரும், தேனிக்காரரும்  கோதாவுல இறங்கியிருக்காங்க. ஆனா முழு கட்சியும் சேலத்துக்காரர் கிட்டதான் இருக்காம். அதே  நேரத்துல என்னிடம்தான் கட்சி இருக்குன்னு தேனிக்காரர் சொல்லிக்கிட்டிருக்காராம். நானும் ஒரு பொதுக்குழுவை கூட்டுவேன்னு சபதமேற்றது  மட்டுமல்லாமல் மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிச்சுக்கிட்டு  இருக்காராம். அப்படியே நிர்வாகிகளை நியமிச்சா நல்லது கெட்டதுல கலந்துக்க  வேண்டியது கடமைதானே. அப்படித்தான் தேனிக்காரரும் கடமையை காட்டினாராம். கட்சியில் இன்னும் பதவி உறுதி செய்யப்படாத நிலையில் மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்களின் பின்னணி பற்றியெல்லாம் அதிகம் பார்ப்பது இல்லையாம். பத்து பேருடன் சென்றால் மாநில, மாவட்ட அளவில் பதவி கொடுத்து  அனுப்புகிறாராம். மாங்கனி  மாநகருல லேடி நிர்வாகியோட தாய் ஹாட்அட்டாக்குல இறந்துபோயிட்டாராம். இதற்கு  இரங்கல் செய்தி அனுப்புன தேனிக்காரர், நிர்வாகியே இறந்து போனதா அறிக்கையை மாத்தி அனுப்பிட்டாராம். தேனிக்காரரே ஆறுதல் சொல்லிட்டாருன்னு சோகத்திலும்  சந்தோசமடைந்த அந்த லேடி நிர்வாகி, சேலத்துக்காரரின் ஆதரவாளர்களுக்கும்  கடிதத்தை அனுப்பினாராம். இதனை பார்த்த சேலத்துக்காரரின் ஆதரவாளர்கள், பதவி இல்லாவிட்டால் ஒரு மனுஷன் நிலைமையை பாருங்க, செத்தது யாருன்னு கூட தெரியாம ஒரு  அனுதாப கடிதம் கூட அனுப்புறார். தேனிக்காரர் எதனை தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் இருக்கிறார் என்று எதிர்கோஷ்டி சொல்லி சிரிக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா ‘‘கோவை மாவட்டத்துல இலை கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்களாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவை  மாவட்டத்தில் 10 தொகுதியில் ஒன்பது பேர் இலை கட்சியின் மக்கள் பிரதிநிதிகள்தான் இருக்காங்க. ஒரு தொகுதியில் தாமரை கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இருக்காங்க. கடந்த 10 ஆண்டு காலமாக இலை கட்சி ஆட்சியில் இந்த ஒன்பது மக்கள் பிரதிநிதிகள் நினைத்திருந்தால், தங்கள் தொகுதிக்கு தேவையான தார்சாலை, தெருவிளக்கு,  குடிநீர்வசதி, மழைநீர் வடிகால் என அனைத்து வேலைகளையும் செய்து  இருக்கலாம். ஆனால், இதுபற்றி பெரிதாக அக்கறை எதுவும்  எடுத்துக்கொள்ளாமல் கரன்சியிலேயே கண்ணாக இருந்துவிட்டனர். இத்திட்டப்பணி காரணமாக, கோவை மாநகர் முழுவதும் தார்சாலைகள்  வீணாகிவிட்டன. ஒவ்வொரு பகுதியிலும் பாதாள சாக்கடை பணி முடிய, முடிய,  பின்னாடியே தார்சாலையை முறையாக சீரமைத்திருந்தால் இரு பணிகளுமே சீராக  நடந்திருக்கும். ஆனால், இப்போது தார்சாலை பழுது காரணமாக தொகுதி முழுவதும்  மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வாகனத்தில் மட்டுமல்ல நடந்தும் போகவில்லை. இதனால், இலை கட்சி எம்எல்ஏக்கள் தொகுதி  பக்கம் தலைகாட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். எப்படியாவது தார்சாலை  போட்டுக்கொடுங்கள் என மாவட்ட உயரதிகாரியிடம் மாறி மாறி கோரிக்கை மனு  கொடுத்து வர்றாங்க. ஆட்சியில் இருக்கும்போது மக்கள் பணிகளை செய்யாமல் தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டனர். இப்போது வெளியில் போனால் ஓட்டு போட்ட மக்கள் திட்டுவார்களே என வீட்டில் இருந்தபடி சக கட்சியின் எம்எல்ஏக்களுடன் என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒரு பேனர் வச்சதுக்கு இத்தனை அக்கப்போரா என்று கதர் கட்சி நிர்வாகி திணறி போன கதையை சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்து ஆட்சியாளர்கள் சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் மின்துறை தனியார் மயமானால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம், யாரை கேட்டு பவர்புல் பெண்மணி, மாநில விஐபி, ஷாக் அமைச்சர் ஆகியோர் இந்த முடிவு எடுத்தார்கள் என கேள்விகளை எழுப்பி பொது இடங்களில் கதர் கட்சியின் எம்பி பேனர் வைத்திருந்தாராம். அதுவே அவருக்கு பெரிய சிக்கலை கொடுத்துவிட்டதாம். விஷயம் இதுதான், சிக்கனத்தின் சிகரமாக திகழும் அந்த எம்பி மிகவும் குறைந்த செலவில் தனது படத்தை மட்டும் போட்டு ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்டு பேனர் வைத்திருந்தார். இதற்கு ஆட்சியாளர்களிடம் இருந்து பதில் வரவில்லை. ஆனால், கதர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், போனை போட்டு எங்கள் படங்கள் இல்லாமல் எப்படி பேனர் வைத்தீர்கள் என்று கேட்டு சண்டை போட்டாங்களாம். நான் என்ன பிறந்தநாளுக்கா வைத்திருந்தேன் எல்லோருடைய படத்தையும் பேனரில் போடுவதற்கு என்று கேட்டிருக்கிறார். அதெல்லாம் முடியாது, எந்த பேனர் வைத்தாலும் எங்களுடைய படமும் இருக்கனும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல் மற்ற நிர்வாகிகளின் படத்தையும் போட்டு புதிதாக ஒரே ஒரு பேனர் வைத்து பிரச்னையை சரி சமாளித்து கதர் கட்சியின் கோஷ்டி பூசலில் இருந்து தப்பித்து இருக்கிறார்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பளு தூக்கும் பயிற்சி மையத்தில் ஆட்டையை போடும் பெண் அதிகாரி யாரு….’’ என்றார் பீட்டர் மாமா.‘‘விளையாட்டுல  வெயிட் லிப்டிங், பாடி பில்டிங் விளையாட்டுகளில் வெயிலூர் பேர் பெற்றது.  வெயிலூர் சத்தான பகுதியில அரசு சார்பா 10 ஆண்டுகளுக்கு முன்பு பளு  தூக்கும் பயிற்சி மையம் தொடங்கினாங்க. அங்க 150 பேர் வரை தங்கலாம், பயிற்சி  எடுக்கலாம். இவர்களுக்கான சத்தான உணவுக்கு என்றே ஆண்டுக்கு ரூ.75  லட்சம் வரைக்கும் அரசு நிதி ஒதுக்குதாம். இந்த நிதியில் இறைச்சி, பாதாம்,  முந்திரி பருப்புனு சத்தான உணவுகள் பயிற்சி எடுப்பவர்களுக்கு  வழங்கப்படுமாம். இந்த நிதியிலதான் இப்ப அங்கிருக்கிற அதிகாரி ஆட்டையை  போட்டு வர்றாராம். சரியான விகிதத்துல யாருக்கும் உணவு வழங்குவதில்லையாம்.  சென்னையில் இருந்து  வந்து விசாரணை நடத்தி, முறைகேடு உறுதியாச்சாம். இந்த விசாரணை நடந்தப்போ  அதிகாரி இங்க இல்லையாம். அவங்க வந்ததும் விஷயம் தெரிஞ்சு பயிற்சி பெறும்  அனைவரையும் நேரில் அழைத்து மிரட்டினாங்களாம். அதோட அவங்க பெற்றோர்களை  அழைத்து, ‘உங்க பசங்க ஊக்க மருந்து பயன்படுத்துறாங்கனு ரிப்போர்ட் பண்ணா,  அவங்க எதிர்கால கனவே அம்பேல்தான் தெரியுமா. அத பண்ணட்டுமா, மூடிகிட்டு இங்க  எல்லாமே சரியாதான் நடக்குதுனு எழுதி கொடுங்கனு’ சொல்லி எழுதி வாங்கி அதை  கலெக்டருக்கு அனுப்பினாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post தேனிக்காரரின் ஒரே லெட்டர் மாங்கனி மாவட்டத்தையே சிரிக்க வைத்த கதையை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Wiki ,Yananda ,Thenikar ,Mangani ,Thenikaran ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...