×

அரசும், நீதித்துறையும் நீதிபதிகள் நியமன நடைமுறை காலக்கெடுவை மதிப்பதில்லை: நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை

புதுடெல்லி: ‘உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் அரசும், நீதித்துறையும் காலவரையறை கடைபிடிக்காதது வருத்தம் அளிக்கிறது’ என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் நடைமுறையை ஒன்றிய பாஜ அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜ மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி தலைமையிலான சட்ட அமைச்சகம் மற்றும் பணியாளர் நலத்துறை நிலைக்குழு தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. கடந்த டிசம்பர் 5ம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, உயர் நீதிமன்றங்களில் நிர்ணயிக்கப்பட்ட 1,108 நீதிபதிகளில் 778 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கடந்த நவம்பர் 25ம் தேதி கொலிஜியம் அனுப்பிய 20 கோப்புகளை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. இவ்வாறு கொலிஜியத்திற்கும் அரசுக்கும் வேறுபாடுகள் உள்ளதால் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் மிகவும் தாமதமாகிறது. குறிப்பாக, தெலங்கானா, பாட்னா மற்றும் டெல்லி ஆகிய 3 உயர் நீதிமன்றங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான காலி இடங்கள் உள்ளன. இவை அனைத்தும் பெரிய மாநிலங்கள். அங்கு நீதிபதிகள் பற்றாக்குறை மிகவும் கவலை அளிக்கிறது. உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறையில் குறிப்பிட்ட காலவரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அரசும், நீதித்துறையும் கடைபிடிக்காதது வருத்தம் அளிக்கிறது. இந்த பிரச்னையை சமாளிக்க அரசும், நீதித்துறையும் இணைந்து சில யோசனைகளைக் கொண்டு வர வேண்டும். நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறையை வெளிப்படைத்தன்மை கொண்டதாக்க இரு தரப்பு ஒப்புதலுடன் தேவையான மாற்றம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post அரசும், நீதித்துறையும் நீதிபதிகள் நியமன நடைமுறை காலக்கெடுவை மதிப்பதில்லை: நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Judiciary ,Parliamentary ,Committee ,New Delhi ,Government ,Parliamentary Standing Committee ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...