×

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலுக்கும் கோரிக்கை: வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு

டெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தற்போது சுமார் 50 டாலர்கள் குறைந்து 76 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது. எனவே கச்சா எண்ணெயின் விலை சரிவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுபெற்றுள்ளது. இந்தியாவில் கடந்த 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாக நீடிக்கிறது. கடந்த பிப்ரவரி 24- ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்ததும் உலகம் முழுக்க பெட்ரொலிய பொருட்களின் விலை உயர ஆரம்பித்தது. உடனடியாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை  நான்கரை டாலர் உயர்ந்து 100 டாலரை எட்டியது. 2014-ம் ஆண்டு செப்டம்பருக்கு பிறகு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இந்த அளவுக்கு உயர்ந்தது பல நாடுகளுக்கு பேரடியாக அமைந்தது. பிறகு உச்சகட்டமாக கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 129 டாலர் அளவுக்கு உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் டீசலின் விலை வெகுவாக உயர்த்தப்பட்டது. விலைவாசி உயர்வுக்கும் வழிவகுத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த மே மாதம் 21-ம் தேதி ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு ரூ.9-யும், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு ரூ.7.50-யும்  குறைத்தது. இதனால் சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 காசுகள் குறைந்து ரூ.102.63-காசுக்கும், டீசல் ரூ.6.70 குறைந்து ரூ.94.24 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெயின் விலை வெகுவாக சரிந்து 76 டாலராக விற்பனையாகிவருகிறது. ஆனால் கச்சா எண்ணெயின் விலை சரிவுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையிலும் ஒன்றிய அரசு விலை குறைக்காமல் இருப்பது பொதுமக்களை வஞ்சிக்கம் செயல் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்குமா, அதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்குமா என மக்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்….

The post பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலுக்கும் கோரிக்கை: வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...