×

ஆத்தூர் முகமூடி கொள்ளை விவகாரம் ₹1 கோடி பணத்தை மறைத்து வைத்து நாடகமாடிய விவசாயி அதிரடி கைது-போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

ஆத்தூர் : சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள தலைவாசல் சார்வாய்புதூர் சாமியார்கிணறு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (48), விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் தாயாருடன், தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு, தனது வீட்டில் இருந்த ₹48 ஆயிரம் பணம், கால் பவுன் நகையை, முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டதாக, தலைவாசல் போலீசில் லோகநாதன் தெரிவித்தார். அதன் பேரில்,தலைவாசல் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று விசாரித்தபோது, தனது நண்பரான ஆத்தூர் மணிவிழுந்தான் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன், அவரது மகன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், கடந்த சில நாட்களுக்கு முன், 2 பேக்குகளில் ₹2 கோடி பணத்தை கொண்டு வந்து தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறி வைத்தனர். அதில், ₹1 கோடி இருந்த ஒரு பேக்கை முகமூடி கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர் என லோகநாதன் கூறினார்.  இதையடுத்து, டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், லோகநாதன், கணேசன் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ₹2 கோடி பணம் எந்த வகையில் கிடைத்தது என கேட்ட போது, 3 பேரும் மாறி மாறி பேசினர். இதனால், போலீசார் குழப்பமடைந்தனர். அப்போது, தனது பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு, லோகநாதன் நாடகமாடுவதாக சந்தேகம் இருப்பதாக கணேசன் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து லோகநாதனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், தனது வீட்டில் இருந்து வெளியேறிய முகமூடி கொள்ளையர்கள், பின்புறம் உள்ள கரும்பு தோட்டத்தின் வழியாக சென்றதாக அவர் தெரிவித்தார். இதன்பேரில் நேற்று முன்தினம் மதியம், கரும்பு தோட்டத்தில் போலீசார் சல்லடை போட்டு தேடினர். அதில், ஓரிடத்தில் ஒரு பேக் கிடந்தது. அதனுள் ₹1 கோடி பணம் இருந்தது. பணத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து, லோகநாதனிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  இதனிடையே கணேசன், போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது பணம் ₹1 கோடியை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி லோகநாதனிடம் கொடுத்தேன். ஆனால் அவர், அதனை எடுத்து வைத்துக் கொண்டு கொள்ளை போனதாக கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும், எனக் கூறியிருந்தார். புகாரின் பேரில், விவசாயி லோகநாதன் மீது சொத்தை நேர்மையற்ற முறையில் கையாடல் செய்தல் (403), நம்பிக்கை மோசடி (406) ஆகிய 2 பிரிவின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து லோகநாதனை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், ‘எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி, நண்பர் கணேசன் கொடுத்த ₹1 கோடி பணத்தை, தினமும் பார்த்து வந்தேன். அதனை எனதாக்கிக் கொள்ள ஆசை ஏற்பட்டது. மேலும், எனக்கு கடன் அதிகளவு உள்ளது. அதனால், அந்த பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு, முகமூடி கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள் எனக்கூறினால், அவர் கேட்கமாட்டார் என நினைத்தேன். அதன்படியே கொள்ளை போனதாக நாடகமாடினேன். ஆனால், போலீசார் தொடர்ந்து விசாரித்ததால், கொள்ளையர்கள் தப்பியதாக போலீசிடம் தெரிவித்தேன். தற்போது நாடகம் அம்பலமாகி சிக்கிக்கொண்டேன்,’’ எனக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான லோகநாதனை, ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். …

The post ஆத்தூர் முகமூடி கொள்ளை விவகாரம் ₹1 கோடி பணத்தை மறைத்து வைத்து நாடகமாடிய விவசாயி அதிரடி கைது-போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Aathur ,Farmer Action Arrest-Police ,Lokanathan ,Dhavasal ,Charvapudur ,Samiarginur ,Aathur, Salem District ,Farmer Action Arrest ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது