×

கிருஷ்ணகிரியில் பண்ணை அமைக்க கோரிக்கை மிரட்டும் மலைப்பாம்புகளை குலதெய்வமாக வழிபட்டு வியப்பூட்டும் விவசாயிகள்

போச்சம்பள்ளி : மனிதர்களை மிரளவைக்கும் மலைப்பாம்புகள் எங்களுக்கு குலதெய்வங்கள். அவற்றை பத்திரமாக பிடித்து பராமரிக்க பண்ணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வியப்பூட்டும் கோரிக்கை வைத்துள்ளனர். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால், கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் தினமும் ஒரு மலைப்பாம்பு அழையா விருந்தாளியாக வந்தாலும், மக்கள்  எந்தவித அதிர்ச்சியையும் காட்டுவதில்லை. இவை அனைத்தும் விஷத்தன்மை இல்லாத பாம்புகள் என்பதுதான் அதற்கான காரணம். மலைகளும், காடுகளும், நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,040 சதுரகிலோ மீட்டர் பரப்பளவிற்கு மேல் காடுகள் உள்ளது. இந்த வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், புலி, மான், கடமான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு  வனவிலங்குகள் காணப்படுகிறது. குறிப்பாக தேன்கனிகோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி வனப்பகுதிகள், யானைகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. இந்த பகுதியில் 450 சதுரகிலோ மீட்டர், தமிழக அரசு அறிவித்துள்ள காவேரி பல்லுயிர் காப்பத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் மலைபாம்புகள் எண்ணிக்கை  அதிகரித்து  காணப்படுகிறது. இங்குள்ள கொத்தூர், நந்திபண்டா, பர்கூர், வரட்டனப்பள்ளி, வேப்பாளப்பள்ளி, உள்ளிட்ட 16 காப்புகாடுகளில் மலைபாம்புகள் உலா  வருகிறது. குறிப்பாக  தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நீரோட்டத்தில் விழும் மலைபாம்புகள் கரை ஒதுங்கி ஊருக்குள் நுழைந்து  விடுகின்றன. தகவல் அறிந்து செல்லும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பிரத்யோகமான கூண்டுக்குள் மலைப்பாம்புகளை பிடித்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேர்ந்தவுடன் மீண்டும் காப்பு காட்டில் விட்டு விடுகின்றனர். ஊருக்குள் நுழையும் மலைப்பாம்புகளை மக்கள் கொல்வது இல்லை. மாறாக சூடம் ஏற்றி, பால் ஊற்றி கடவுளாக வழிபடுகின்றனர். தங்கள் நிலத்தில் மலைப்பாம்பு கிடந்தால் அதிர்ஷ்டம் என விவசாயிகள் ஆனந்தப்படுகின்றனர். இதனால் இந்த இனத்திற்கு அழியும் ஆபத்தை விட, வாழும் வழி முறைகளே நிறைய இருக்கிறது. இதனால் மலைப்பாம்புகளின் இன விருத்தியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் வயல்களில் வாழும் எலிகளை உண்பதாலும், வனங்களில் நுழையும் கொடிய பூச்சிகளை விழுங்குவதாலும், விவசாயிகளுக்கும், காடுகளுக்கும் உற்ற நண்பனாவே திகழ்கிறது மலைப்பாம்புகள்.  இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘கிருஷ்ணகிரி வனப்பகுதியில் விலங்குகள் இன விருத்தி கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், மலைப்பாம்பை எந்த விலங்கும் கொன்று தின்பது இல்லை. இதனால் இவ்வினவிருத்தி வேகமாக அதிகரித்துள்ளது. மலைப்பாம்பின் உணவு முறை மிகவும் வித்தியாசமானது. தனக்கான இரையை பார்த்தால் தலையை தூக்கி வித்தியாசமான இசை போன்றதொரு  ஒலியை எழுப்பும். இதைகேட்டு மயங்கும் நிலையில் இருக்கும் இரையை, லபக்கென சுற்றி வளைத்து ஒரே மூச்சில் எலும்புகளை நொறுக்கி கபளீகரம் செய்து விடும். பொதுவாக மலைபாம்புகள் ஒரு ஆட்டை விழுங்கி விட்டால் குறைந்தது 3 மாதம் இரை எடுக்காது. அதே போல இரை வயிற்றில் இருக்கும் போது அங்கும், இங்கும் நகர முடியாமல் ஒரே இடத்தில் படுத்து விடும். சில சமயத்தில் பாம்பு மீது புற்றும் வளர்ந்து விடும். யானைகள், காட்டுப்பன்றிகள் விவசாயப்பயிர்களை அழித்து விடும். ஆனால் மலைப்பாம்பு பயிர்களை அழிக்காது. மாறாக பயிர்களை சேதப்படுத்தும் எலிகள், பெருச்சாளிகளை விழுங்கும். எனவே, விவசாயிகள் மலைப்பாம்பை தெய்வமாக வணங்குகிறார்கள்,’’ என்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட காப்புகாடுகளில் மலைப்பாம்புகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமத்திற்குள் புகுந்து வரும் பாம்புகளை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம். விவசாயத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் கொடிய பூச்சிகளை உண்டு, காவல் நிற்பதால் அதனை துன்புறுத்துவதில்லை. கண்ணில் பட்டவுடன் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கிறோம்.உடனடியாக அவர்கள் வந்து பிடித்துச்சென்று, காட்டு பகுதிகளில் விட்டுவிடுகின்றனர். அதே நேரத்தில், மீண்டும் அவை ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே மான், முதலைகளுக்கு பூங்கா  அமைத்துள்ளது போல்  மலைப்பாம்புகளுக்கும்  அடைக்கலம் தரும் விதமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை பூங்கா அல்லது கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்ட்டிணம் செல்லும் அவதானப்பட்டி ஏரிப்பூங்காவில் மலைப்பாம்புப்பண்ணை அமைக்க வேண்டும். சுற்றுலா துறையும், வனத்துறையும், இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றனர்….

The post கிருஷ்ணகிரியில் பண்ணை அமைக்க கோரிக்கை மிரட்டும் மலைப்பாம்புகளை குலதெய்வமாக வழிபட்டு வியப்பூட்டும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Pochampalli ,Krishnakiri ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...