×

செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தரைப்பாலத்தில் பாய்ந்தோடும் சித்தாத்தூர் ஏரி உபரிநீர்

*போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி *மேம்பாலம் அமைக்க கோரிக்கைசெய்யாறு :  செய்யாறு அடுத்த சித்தாத்தூர் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய் தூர்ந்துபோனதால் சாலையின் குறுக்கே தரைப்பாலத்தில் வெள்ளம் பாய்ந்தோடி செல்கிறது. இதனால் போக்குவரத்து துண்டித்து கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தில் அதிகபட்சமாக செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவில் 28 செ.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக, செய்யாறு அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏரியில் இருந்து வழிந்தோடும் உபரிநீரானது கால்வாய் வழியே மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு சென்றடையும். ஆனால், அந்த ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்ந்துபோனதால் உபரிநீர் கால்வாயில் கரைபுரண்டு விவசாய நிலங்களை மூழ்கடித்து சென்று கொண்டிருக்கிறது. மேலும், அந்த பகுதி வழியாக பாண்டியன்பாக்கம்- வெம்பாக்கம் சாலை செல்கிறது. நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள பிரதான சாலையில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 2 நாட்களாக உபரிநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கால்வாயின் குறுக்கே சாலையில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தையும் தாண்டி, சுமார் 700 மீட்டர் தூரத்திற்கு சாலையில் மழை வெள்ளம் செல்கிறது.இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவ்வழியாக இயக்கப்பட்டு வந்த பஸ் கடந்த 2 நாட்களாக இயக்கப்படாததால், 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பஸ் வசதியின்றி தவித்து வருகின்றனர்.கால்வாய் தூர்வாரப்படாததாலும், சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தின் மீது மழை வெள்ளம் வழிந்தோடுவதாலும் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் விவசாயமும், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.எனவே, உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரவும், கால்வாயின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தரைப்பாலத்தில் பாய்ந்தோடும் சித்தாத்தூர் ஏரி உபரிநீர் appeared first on Dinakaran.

Tags : Chittatur ,Cheyyar ,Chittathur ,Seyyar ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே...