×

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அமோகம்-கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை போன்ற பொருட்களின் விற்பனை அமோகமாக நடக்கிறது. காவல்துறை,மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குட்கா,போதை பாக்கு,பான்பாரக்,பான்மசாலா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி போதை பொருள் ஒழிப்புக்கான சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். போதை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவர்களுடைய சொத்துக்களை முடக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வெண்டும். போதை பொருட்களின் தீங்கு, பின்விளைவுகள் குறித்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தபட வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் நல்ல வருவாய் கிடைப்பதால், பல வியாபாரிகள் கடைகளில் தடைகளை மீறியும் விற்பனை செய்து வருகின்றனர்.அவ்வப்போது காவல்துறையினர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு அபராதம் விதித்தாலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறைந்தபாடில்லை. நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக இவை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் சர்வசாதாரணமாக போதை பொருட்கள் புழங்கும் நிலையில், அங்கிருந்து நீலகிரிக்கு காய்கறி லாரிகள், சுற்றுலா வாகனங்களில் கடத்தி வரப்படுகின்றன. இதுதவிர அங்குள்ள நபர்கள் சட்டவிரோதமாக கடத்தி வந்து இங்குள்ள கடைகளுக்கு விநியோகம் செய்கின்றனர். ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை ஏற்றும்  புகையிலை பாக்கெட்டுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்டி கடைகளில் மிட்டாய், பிஸ்கெட் போன்றவைகள் விற்பதால் கிடைக்கும் வருவாயை காட்டிலும், போதை பொருட்கள் விற்பதால் நல்ல வருவாய் கிடைப்பதால் சட்டவிரோத விற்பனை தொடர்கிறது. புகையிலை பாக்கெட்டுகளை பாக்கெட் ஒன்றுக்கு ரூ.20க்கு வாங்கி வந்து முதல் ரூ.60 வரை என 3  மடங்கு விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள சிறு சிறு கடைகளில் இவற்றின் விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுமட்டுமின்றி 18 வயதிற்கு குறைவான சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் போன்றவை விற்கப்படுவதாக பரவலான புகார்கள் உள்ளன. கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்படுகின்றன. இதுமட்டுமின்றி கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு நீலகிரி மாவட்டம் வழியாக புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. எனவே அவை நீலகிரிக்குள் நுழையாமல் தடுக்க சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்திட வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை  இவ்விவகாரத்தில் தலையிட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை கடைகளில் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களின் விற்பனை அதிகமாக உள்ளது. இவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி பாதிப்படைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்….

The post தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அமோகம்-கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kudka ,PanMasala ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்