×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது புயல் 12 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்; சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழக மக்களை பயமுறுத்தி வந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் கடந்த சில தினங்களாக தமிழக மக்களை மிரட்டி வந்தது. இந்த மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு மாமல்லபுரம் அருகே புயலின் முதல் பகுதி கரையை தொட்டது. இது நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது. ஆனாலும், 4 மணி வரை புயல் காற்று கடுமையாக வீசியது. புயல் கரையை கடப்பதற்கு முன்பாக இரவு 6 மணி முதல் பலத்த சூறாவளி காற்று அடித்து நொறுக்க தொடங்கியது. சுமார் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கரையை கடந்த நேரத்தில் காற்றின் வேகம் இன்னும் அதிகரித்தது. அதே நேரத்தில் பலத்த கனமழையும் இடை, இடையே பெய்து கொண்டிருந்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. நான்கு பக்கமும் சுழன்று, சுழன்று வீசிய காற்றால் மரக்கிளைகள் ஓடிந்து விழுந்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தது. வீட்டில் இருந்த ஜன்னல் மற்றும் கண்ணாடிகள் துவம்சம் ஆனது. மாடிகளில் இருந்த பூந்தொட்டிகள், மேற்கூரைகள் அனைத்தும் காற்றில் சின்னா பின்னமானது. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. குறிப்பாக ரயில் நிலையங்களில் இருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தன. அதில் வந்த சத்தத்தை பார்த்து பயணிகள் அதிர்ந்து போயினர். அதே நேரத்தில், பலத்த காற்று வீசிய நேரத்தில் மின்சார ரயில், பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் சேவை அனைத்தும் சில மணி நேரம் தடைப்பட்டது. ஒரே தண்டவாளத்தில் முன்னரும், பின்னரும் ரயில்கள் நின்ற காட்சியை காணமுடிந்தது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பலத்த சூறாவளி காற்று வீசிய போதிலும் பெருத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை. அரசு எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் கரை கடந்தாலும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயல், நேற்று(நேற்று முன்தினம்) நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இன்று(நேற்று) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12ம் தேதி(நாளை) 13ம் தேதி(நாளை மறுநாள்) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.14ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு(இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.இன்றும் மற்றும் நாளை லட்சதீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்….

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது புயல் 12 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்; சென்னை வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Department ,CHENNAI ,Tamil Nadu ,Mamallapuram ,
× RELATED தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்