தொடர்ந்து வெறுப்பு கருத்துகளை கூறிவரும் நடிகை கங்கனாவை ஜெயிலில் போடுங்க; இல்லாட்டி ‘மென்டல்’ ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்க!: சீக்கிய குருத்வாரா தலைவர் காட்டம்

புதுடெல்லி: தொடர்ந்து வெறுப்பு கருத்துகளை கூறிவரும் கங்கனாவை ஜெயிலில் போடுங்க; இல்லாவிட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள் என்று சீக்கிய குருத்வாரா தலைவர் காட்டத்துடன் தெரிவித்தார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளை கூறிவரும் பாலிவுட் நடிகை கங்கனா சமீபத்தில் நாடு சுதந்திரம் பெற்றது தொடர்பாகவும், மகாத்மா காந்தி குறித்தும் ேபசியது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. தற்போது, ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய பஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கூறியுள்ள கங்கனா, ‘காலிஸ்தான் தீவிரவாதிகள் இன்று வேண்டுமானால் அரசை வளைத்திருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணை மறக்கக்கூடாது. நாட்டில் பெண் பிரதமர் மட்டுமே காலிஸ்தான் தீவிரவாதிகளை தன் கால் ஷுவால் நசுக்கினார். இந்த நாட்டுக்கு அவர் எவ்வளவுதான் கெடுதல் விளைவித்திருந்தாலும், தன் உயிரைப் பணயம் வைத்து கொசுக்களை நசுக்குவது போல் காலிஸ்தான் தீவிரவாதிகளைக் காலால் நசுக்கினார். இன்றும் அவர் பெயரைக்கேட்டாலே நடுங்குகிறார்கள். அவரைப்போன்ற ஒருவர் அவர்களுக்குத் தேவை’ என்று கருத்து பதிவிட்டிருக்கிறார்.

கங்கனாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அகாலி தளத்தின் தலைவரும், டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழு தலைவருமான மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, `வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் இயக்கம் என்று கங்கனா குறிப்பிட்டிருக்கிறார். ஒட்டுமொத்த சீக்கிய சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் அவர்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும், அவர்களை இந்திரா காந்தி கொசுக்களை நசுக்குவது போல் நசுக்கியதாகவும் கூறியிருக்கிறார். வெறுக்கத்தக்க கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வரும் கங்கனாவை சிறையில் அடைக்க வேண்டும் அல்லது மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். விவசாயிகளை அவர் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கூறியது விவசாயிகளை அவமதிப்பது போல் உள்ளது. அவர் வெறுப்பு கருத்துகளை பரப்பும் தொழிற்சாலையாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் பத்ம விருதுகளை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். அவருக்கு எதிராக டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: