தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து ஹாலிவுட்டை கலக்கும் பாலிவுட் நடிகை விவாகரத்து?: கணவரின் பெயரை நீக்கியதால் பரபரப்பு

மும்பை: ஹாலிவுட்டை கலக்கி வரும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவரின் ‘சர்நேமை’ சமூக வலைதள கணக்கில் இருந்து நீக்கியதால் இருவரும் பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்த பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட வயது குறைந்த ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிலும் கால் பதித்த பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அடிக்கடி தனது கணவருடன் நேரத்தை செலவழிக்கும் கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பிரியங்கா சோப்ரா வெளியிட்டு வருகிறார். தற்போது லண்டனில் பிரியங்கா சோப்ரா வசித்து வரும் நிலையில், தனது சொந்த வேலையின் காரணமாக அவரது கணவர் நிக் ஜோனஸ் அமெரிக்காவில் இருக்கிறார்.

சமீபத்தில் லண்டனில் வீடு வாங்கிய தம்பதியர், தங்களது முதலாவது தீபாவளியை அந்த வீட்டில் கொண்டாடினர். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் கணவரின் சர் நேம்மான ஜோனஸை சேர்த்திருந்தார். ஆனால் தற்போது தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் சர் நேம் பெயரை திடீரென நீக்கியுள்ளார். பிரியங்கா சோப்ரா தனது கணவரின் பெயரை நீக்கியதை பார்த்த அவரது ரசிகர்களும், நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச திரைப்பட நட்சத்திரங்களாக உலா வந்த தம்பதிகள் பிரிகின்றனரா? என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க தம்பதியர் இருவரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இதுகுறித்து பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா கூறுகையில், ‘சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் எல்லாம் பொய். வதந்திகளை  பரப்ப வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார். இருந்தும் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லாததால், ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: