×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தும் மேற்படிப்பிற்கு இடம் கிடைக்காமல் தவிக்கும் முக்கூடல் மாணவி: மாவட்ட நிர்வாகம் உதவ பாட்டி கோரிக்கை

பாப்பாக்குடி: பெற்றோரை இழந்ததால் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் முக்கூடல் மாணவி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தும் மேற்படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உதவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் பாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் முக்கூடல்  தியாகராஜர் தெருவை சேர்ந்த வசந்தி -முருகன் தம்பதியினரின் குழந்தைகள்  பேச்சியம்மாள் (17), சுடர்மணி (16), முத்துமாரி (11). 2015ம் ஆண்டு  வசந்தியும், 2017ல் முருகனும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். பெற்றோரை  இழந்து தவித்த குழந்தைகள் மூவரும் பாட்டியான வசந்தியின் தாய் வள்ளியின்  அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர். இவர்களுடன் வள்ளியின் தாய்  ராமலட்சுமியும் வசித்து வருகிறார். வள்ளி,  இப்பகுதியினர் உதவியுடன் பேச்சியம்மாளை காரையார் மேலணையில் உள்ள அரசு  உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தார். படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட  பேச்சியம்மாள், கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு  310 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.தொடர்ந்து பேச்சியம்மாளை மேற்படிப்பு படிக்க  வைப்பதற்காக தங்கும் வசதியுடன் கூடிய சில அரசு பள்ளியில் வள்ளி முயற்சி  செய்தார். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. பள்ளியிலேயே முதல் மதிப்பெண்  பெற்றும், வேறு பள்ளியில் இடம் கிடைக்காததால் கடந்த 7 மாதங்களாக  பேச்சியம்மாள் மேற்படிப்பை தொடர முடியாமல் வீட்டிலேயே காத்திருப்பதாக அவரது  பாட்டி வள்ளி கண்ணீருடன் தெரிவித்தார். இதுகுறித்து  அவர் கூறுகையில், ‘எனது பேரன் 5ம் வகுப்பு வரை படித்த நிலையில் அவனது  சான்றிதழ் தவறிவிட்டதால் படிப்பை தொடர முடியவில்லை. 2வது பேத்தி 5ம்  வகுப்பு படித்து வருகிறார். மூத்த பேத்தி பேச்சியம்மாள் 10ம் வகுப்பு  முடித்த நிலையில் வேறு பள்ளியில் இடம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.  பெற்றோரை இழந்த எனது பேத்தியை உயர் கல்வியில் சேர்க்க மாவட்ட நிர்வாகம்  உதவிட வேண்டும், என்றார். பேச்சியம்மாள்  கூறுகையில், ‘பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்புக்கு இடம்  கிடைக்கவில்லை. நான் படிக்க வேண்டும். படித்து டாக்டராக வேண்டும் என்ற ஆசை  உள்ளது’ என்றார்….

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தும் மேற்படிப்பிற்கு இடம் கிடைக்காமல் தவிக்கும் முக்கூடல் மாணவி: மாவட்ட நிர்வாகம் உதவ பாட்டி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Papakudi ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...