×

சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்ட சம்பவம் பெண்களுக்கு எதிரான நாகரீகமற்ற கலாசாரத்தை தடுத்து நிறுத்துங்கள்: நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆவேசம்

ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து ஆந்திர சட்ட சபையில் விமர்சிக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு, ‘இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் வருவேன்’ என்று சொல்லி வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: பெண்களை மதிப்பது நமது பாரம்பரியம். அதை கைவிடுவது பேரழிவை ஏற்படுத்தும். அரசியலில் மற்றவர்களை விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான். விமர்சனங்கள் மக்கள் பிரச்னைக்காக இருக்க வேண்டும். அவை தனிப்பட்டதாக இருக்கக்கூடாது. தனிநபர்களை அவதூறாகப் பேசக்கூடாது.

ஆந்திர சட்டசபையில் நடந்த சம்பவம் என்னை காயப்படுத்தியுள்ளது. நாம் தனி மனித தாக்குதல்களை நடத்தினால், குறிப்பாக, பெண்களுக்கு எதிரான கேவலமான வார்த்தைகளால் பேசினால், அது காட்டுமிராண்டித்தனமான ஆட்சிக்கு வழிவகுக்கும். பெண்களை மதிப்பது நமது ரத்தத்திலும், பாரம்பரியத்திலும் இருக்கிறது. இந்த பாரம்பரியத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். நான் என்டிஆர் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதற்காக பேசவில்லை. ஒரு மகனாக, கணவனாக, தந்தையாக, இந்தியக் குடிமகனாக, தெலுங்கனாக பேசுகிறேன்.  பெண்களை அவதூறு செய்யும் இந்த நாகரீகமற்ற கலாசாரத்தை அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த தலைமுறைக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

Tags : Chandrababu Naidu ,Jr. ,
× RELATED முதல்வர் ஜெகன் மோகன் தாக்கப்பட்ட...