×

சூர்யவன்ஷி - திரைவிமர்சனம்

ஆக்‌ஷன் அதிரடி சரவெடி என களமிறங்கியிருக்கிறது அக்‌ஷய் குமாரின் ‘சூரியவன்ஷி’. ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட், தர்மா புரடெக்‌ஷனுடன் ரோஹித் ஷெட்டி இணைந்து  தயாரிக்க ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், காத்ரீனா கைஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் போலீஸ் யுனிவர்ஸ் ஃபிரான்சைஸ் படம் இதற்கு முன்பு வெளியான அஜய் தேவ்கனின் ‘சிங்கம் 1,2’, ரன்வீர் சிங்கின் ‘சிம்பா’ தொடர்ந்து வெளியாகியிருக்கும் போலீஸ் உலகின் நான்காம் பாகம்.

1993ம் ஆண்டு, மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை மேற்கோள் காட்டி ஆரம்பிக்கும் கதை அடுத்து பாகிஸ்தான் தீவிரவாதம், 40க்கும் மேலான ஸ்லீப்பர் செல்கள், காணாமல் போன கிலோ கணக்கிலான ஆர்.டி.எக்ஸ்  வெடி மருந்து என கதைக்களம் பரபரக்க அப்படியே தெறிக்கும் புல்லட்கள், பறக்கும் கார்கள், வேன்கள் என ரோஹித் ஷெட்டி ஸ்பெஷல் ஆக்‌ஷன் சரவெடியாக கிளைமாக்ஸ் என்ன ஆனது என்பது மீதிக் கதை. அக்‌ஷய் குமார், படம் ஆரம்பிக்கும் போது ஹெலிகாப்டரில் மாஸாக வந்திறங்குகிறார்.

அந்த நிமிடம் முதல் மனிதர் யூனிஃபார்ம் சகிதமாக விரைத்த தோள், ஸ்டைலிஷ் நடை, கிளாஸ் லுக் என ரசிகர்களை ஆர்பரிக்கச் செய்கிறார். அவருடைய லுக் போலீஸ் கெட்டப்புக்கு மேலும் அழகுக் கூட்ட அரங்கம் அதிர்கிறது. காத்ரீனா அழகிய டாக்டரம்மாவாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஆனாலும் ஆங்காங்கே ரொமான்ஸ், சென்டிமென்ட் , அழுகை, தவிப்பு , கணவனுடன் சண்டை, அப்படியே ’டிப் டிப்…’ ரீமிக்ஸுக்கு ஒரு மழை டான்ஸ் என அசத்துகிறார். அடடே நம்ம ’சிங்கம்’ அஜய் தேவ்கன், ’சிம்பா’ ரன்வீர் சிங் என இருவரின் என்ட்ரீ படத்திற்கு மற்றுமொரு ஹைவோல்டேஜ் அஸ்திரம். கூலர் குறும்பு என ரன்வீர் ஒரு ஸ்டைல் எனில் வேனை ஸ்லோ மோஷனில் சுற்ற விட்டு இறங்கி வரும் அஜய் தேவ்கன் மற்றொரு ஸ்டைல்.

மூவரும் இணைந்து ஒரு கட்டத்தில் காத்ரீனாவைக் காப்பாற்ற முயற்சி செய்து அதில் காமெடி கலாட்டா, தொடர்ந்து மும்மூர்த்திகள் உலா என படம் எங்கேயும் நம்மை சீட்டில் சாதாரணமாக இருக்க விடாமல் டென்ஷன் மோடிலேயே வைத்திருக்கிறது. தமன் மற்றும் அமர் மொஹைல் இசையில் பின்னணி மாஸ், எனில் தனிஷ்க் பக்சி இசையில் பாடல்கள் கிளாஸ். ’டிப்பு,டிப்பு’… பழைய மாவில் கிடைத்திருக்கும் புதிய நெய் ரோஸ்ட். ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவில் சேஸிங் காட்சிகள் அனல் பறக்கின்றனர்.

கமர்சியல் மசாலா கதைகளுக்கே உரிய சில லாஜிக் தொங்கல்கள் இருந்தாலும் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை ஒரு பரபரப்பிலேயே வைத்திருந்து விழாக்கால மோடை அப்படியே உடைக்காமல் குடும்பத்தோடு வெளியே அனுப்புவதால் ‘சூர்யவன்ஷி’ சும்மா இல்லாமல் சூப்பராக நம்மை கடந்து செல்கிறது.

Tags : Suryavanshi ,
× RELATED 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி:...