பிட்னஸ் சென்டர்களை தொடங்கி பணம் வசூல் ரூ.1.36 கோடி மோசடி வழக்கில் நடிகை ஷில்பா விடுவிப்பு: உத்தரபிரதேச போலீசார் திடீர் முடிவு

லக்னோ:நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் சுனந்தா மீது தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கில் இருந்து அவர்களை போலீசார் விடுவித்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் `லோசிஸ் வெல்னஸ் சென்டர்’ என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்களை திறந்தார். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் இந்த சென்டர்களை திறக்க பலரிடம் கோடிக்கணக்கில் ஷில்பா ஷெட்டி பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.  அதன் பிறகு அந்த தொழில் காணாமல் போய்விட்டது. லக்னோவை சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோஹித் வீர் சிங் ஆகியோர் நடிகை ஷில்பா ஷெட்டியிடம், பிட்னஸ் சென்டர் கிளைகளை தொடங்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், ஆனால் கிளைகள் தொடங்கப்படவே இல்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரும் போலீசில் புகார் செய்துள்ளனர். அதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஷில்பா ஷெட்டிக்கும் அவரது தாயார் சுனந்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். ஷில்பா ஷெட்டி ஆரம்பித்த கம்பெனியில் ஷில்பா தலைவராகவும், அவரது தாயார் இயக்குநராகவும் இருந்தனர். எனவேதான் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் சுனந்தா ஆகியோரை எப்ஐஆரில் இருந்து போலீசார் நீக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ரூ.1.36 கோடி மோசடி புகாரின் அடிப்படையில், நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் சுனந்தா, ஷில்பாவின் மேலாளர் கிரண் பாவா உட்பட பலர் மீது எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது. கடந்த ஆக. 11ம் தேதி மும்பை சென்ற விபூதி கண்ட் போலீசார், மும்பைக்கு சென்று தீவிரமாக விசாரித்தனர்.

இந்த வழக்கு பதிவு செய்வதற்கு  முன்பே சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனான தனது உறவை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் முடித்துக் கொண்டனர். ஆனால், கிரண் பாவா உட்பட எட்டு குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று அவர்கள் கூறினர்.ஷில்பாவின் கணவர் ராஜ்குந்தரா கடந்த சில வாரங்களுக்கு முன் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில், மோசடி வழக்கில் சிக்கிய ஷில்பா, தற்போது அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: