×

ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா, லண்டன் அமைப்புக்கு என்ன தெரியும்? உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

புதுடெல்லி: தமிழகத்தின் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாட்டு அமைப்புக்கு என்ன தெரியும் என உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகத்தில் கம்பாலா உள்ளிட்ட மிருகங்களை கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஆறாவது நாளாக நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,  ‘‘ஜல்லிக்கட்டு என்பது எங்களது அடிப்படை உரிமை, கலாச்சாரமாகும். இதுகுறித்து முடிவெடுக்க நீதிமன்றம் ஒன்றும் நடுவர் கிடையாது. இதில் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உயிரிழப்பு ஏற்படுகிறது என மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. சாலையில் நாம் சென்று கொண்டிருக்கும் போது கூட தான் திடீரென மரணம் ஏற்படுகிறது. அதற்காக செல்லாமல் இருக்க முடியுமா. இருப்பினும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது என்பதற்காக தான் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முன்பு காளைகளுக்கு பல்வேறு சோதனைகள் நடத்துகிறீர்கள்?. அப்படியெனில் விளையாட்டு முடிந்தும் பரிசோதனை செய்யப்படுமா என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி, கண்டிப்பாக நடத்துகிறோம். இதனை நீதிமன்றம் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். இதையடுத்து ஜல்லிக்கட்டு பேரவை மற்றும்  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து,‘‘ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு அல்ல அது திருவிழா. அது கோயிலோடு தொடர்புடையது ஆகும். காளை என்பது எங்களது குடும்ப உறுப்பினர். அவ்வாறு இருக்க எப்படி ஒரு குடும்ப உறுப்பினரை நாங்கள் துன்புறுத்துவோம்?. ஜல்லிக்கட்டுக்கு இரு நாட்களுக்கு முன் ஊரே கோவிலில் கூடி  காளைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்வோம். மேலும் அந்த காளைகளை தெய்வமாக பாவித்து வணங்குகிறோம். எனவே, இது கலாச்சாரம், பண்பாடு, மதம் என அனைத்தையும் ஒன்றிணைந்த பொதுத்திருவிழா ஜல்லிக்கட்டு ஆகும். இதில் ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா, லண்டனில் இருந்து இயங்கம் வெளிநாட்டு அமைப்புக்கு என்ன தெரியும். மேலும் நமது உணர்வு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை அவர்களுக்கு எப்படி புரியும் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக நமது கலாச்சார விளையாட்டை சட்டமாக்கிய பின்னர் அதை இந்த வெளிநாட்டு அமைப்பு எவ்வாறு ஆட்சேபிக்க முடியும் என காரசார வாதங்களை முன்வைத்தார். ஆனால் மேற்கண்ட வாதங்களுக்கு பீட்டா அமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது….

The post ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா, லண்டன் அமைப்புக்கு என்ன தெரியும்? உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் appeared first on Dinakaran.

Tags : United States and London Organization ,Jallikadu ,Supreme Court ,New Delhi ,United States ,London ,Tamil Nadu ,Supreme ,Jallikata ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு