×

2,668 அடி உயர மலை மீது 2வது நாளாக மகாதீபம்; திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு: 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 2வது நாளாக நேற்று காட்சியளித்தது. மேலும், கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் பிரசித்திபெற்ற மகாதீப பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, அன்று மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். வரும் 16ம் தேதி வரை தீபத்தை தரிசிக்கலாம். தீபத்திருவிழாவின் முதல் நாளான்று ஏற்றுவது மகா தீபம், 2வது நாளன்று ஏற்றுவது சிவாலய தீபம், 3ம் நாளன்று ஏற்றுவது விஷ்ணு தீபமாகும்.அதன்படி, 2வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு, அண்ணாமலை மீது சிவாலய தீபம் காட்சியளித்தது. அப்போது, கிரிவலப்பாதை கோயில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 8.14 மணிக்கு தொடங்கி, இன்று காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது. ஒருசில ஆண்டுகளில், மகா தீபமும், பவுர்ணமியும் ஒரே நாளில் அமையும். இந்த ஆண்டு, மகா தீபத்திற்கு அடுத்த நாள் பவுர்ணமி அமைந்திருந்தது. எனவே, கார்த்திகை மாத பவுர்ணமி தினமான நேற்று அதிகாலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். பகலில் கிரிவல பக்தர்கள் கூட்டம் குறைந்தது. அதைத்தொடர்ந்து, மாலை 5 மணிக்கு பிறகு மீண்டும் கூட்டம் அதிகரித்தது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அதோடு, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, விரைவு தரிசனத்துக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. …

The post 2,668 அடி உயர மலை மீது 2வது நாளாக மகாதீபம்; திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு: 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Mahadipam ,Thiruvannamalai ,Maha ,Karthikai fire festival ,
× RELATED 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு...