×

பருப்பு, பாமாயில் இறக்குமதி செய்த இன்டகிரேடட் சர்வீஸ் உள்பட 5 நிறுவனங்கள் ரூ.290 கோடி வரி ஏய்ப்பு: ஐடி சோதனையில் பகீர் தகவல் அம்பலம்

சென்னை: வெளிநாடுகளில் பருப்பு மற்றும் பாமாயில் இறக்குமதி செய்ததில் 5 நிறுவனங்கள் ரூ.290 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது, வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் பொது விநியோக திட்டத்துக்கு பருப்பு மற்றும் பாமாயில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காமாட்சி அண்ட் கோ, அருணாச்சலம் இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில், ஹிராஜ் டிரேடர்ஸ், இன்டகிரேடட் சர்வீஸ் புரோவைடர் என 5 பெரிய நிறுவனங்கள் தான் ஒப்பந்தம் செய்து மொத்தமாக விநியோகம் செய்து வருகிறது.இந்த 5 நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் பொது விநியோக திட்டத்துக்கு தேவையான அனைத்து வகையான பருப்பு மற்றும் பாமாயிலை மொத்தமாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து, மண்டல வாரியாக பொது விநியோக திட்டத்துக்கு அனுப்பி வருகிறது. பருப்பு மற்றும் பாமாயிலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து கடந்த மாதம் 23ம் தேதி ஒரே நேரத்தில் டெல்லி, மும்பை, சென்னையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த 5 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தின் குடோன் மற்றும் அதன் உரிமையாளர் வீடு, காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தின் கணக்காளர் வீடு, மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலம் இம்பெக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், ஏழுகிணறு பகுதியில் உள்ள ஹிராஜ் டிரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இன்டகிரேடட் சர்வீஸ், அண்ணாநகரில் உள்ள அலுவலகங்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி, சேலம், மதுரை என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சோதனை நடந்தது.4 நாட்களாக நடந்த சோதனையில் முடிவில் இன்டகிரேடட் சர்வீஸ், காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்களில் இருந்து பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு மற்றும் பாமாயில் தொடர்பானவற்றில் முறையான கணக்கு பராமரிப்பு இல்லை. இதையடுத்து சோதனையின்போது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், சொத்து பத்திரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அலுவலகத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனம் ரூ.60 கோடியும், பெஸ்ட் டால் மில் நிறுவனம் ரூ.80 கோடியும், இன்டகிரேடட் சர்வீஸ் புரோவைடர் நிறுவனம் ரூ.150 கோடி என 5 நிறுவனங்களும் போலியான ரசீதை தயாரித்து அதன் மூலம் பல கோடிக்கு பாமாயில் மற்றும் பருப்பு விற்பனை செய்ததாக கணக்கு காட்டி, மொத்தம் ரூ.290 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் விசாரணை நடக்கிறது….

The post பருப்பு, பாமாயில் இறக்குமதி செய்த இன்டகிரேடட் சர்வீஸ் உள்பட 5 நிறுவனங்கள் ரூ.290 கோடி வரி ஏய்ப்பு: ஐடி சோதனையில் பகீர் தகவல் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Incorporated Serv ,Bakir ,Chennai ,ID ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...