×

பரபரப்பான அரசியல் சூழலில் குளிர்கால கூட்டத் தொடர்; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: விலைவாசி உயர்வு, சீன எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் 25 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், விலைவாசி உயர்வு, சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்க உள்ளது.  23 நாட்களில் 17 அமர்வாக நடக்கும் இக்கூட்டத் தொடரில் 25 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம், விலைவாசி உயர்வு, சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழல், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு பயன்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக ஒன்றிய அரசு தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 30 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்தில் வலியுறுத்தினார். மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைக்க வேண்டுமென நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகாலாத் ஜோஷி கேட்டுக் கொண்டார். அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல், இந்தியா, சீனா எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும். இந்த பிரச்னைக்கெல்லாம் ஒன்றிய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். குறிப்பாக எல்லையில் நிலவும் மோதல் குறித்து அரசு எந்த தகவலையும் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. எனவே சீன எல்லை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு காஷ்மீர் பண்டிட்களின் கொலைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘எதிர்க்கட்சிகள் கூறும் அனைத்து பிரச்னைகளும் கவனத்தில் கொள்ளப்படும். அதே சமயம், நாடாளுமன்றத்தின் விதிகள் மற்றும் நடைமுறையின்படி விவாதங்கள் நடைபெறும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெறும் அலுவல் ஆலோசனைக் கூட்டங்களில், விவாதம் நடத்த வேண்டிய பிரச்னைகள் இறுதி செய்யப்படும்’’ என்றார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அலுவல் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருவதால் குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post பரபரப்பான அரசியல் சூழலில் குளிர்கால கூட்டத் தொடர்; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: விலைவாசி உயர்வு, சீன எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Winter session ,Parliament ,Opposition ,China ,New Delhi ,Winter Session of Parliament ,Union ,Dinakaran ,
× RELATED 28 ஆண்டுக்கு பின் திமுக நாடாளுமன்ற...