×

நாற்று வளர்ப்பை நம்புங்க! நல்ல லாபம் பாருங்க!

வழிகாட்டும் விவசாயத்தோழி ராதிகா‘‘பூர்வீகம் ஆத்தூர் பக்கம். விவசாய குடும்பத்தில் பிறந்தேன். 12ம் வகுப்புவரை படித்தேன். பனமரத்துப்பட்டியில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் என்னை திருமணம் செய்து கொடுத்தாங்க. மாமியார் வீடு விவசாயக்குடும்பமாக இருந்தாலும் கணவர் சங்கர் எம்எஸ்சி சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் படித்து விட்டு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்றார். பரம்பரை விவசாயிகளாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் மேம்பாட்டுக்கான தொழிலா அது இருக்கவில்லை. மணமுடித்து வந்த நான், மாற்றாக வருவாய் தரும் பயிரா என்ன செய்யலாம்? என்று யோசித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். அதில் சக்சஸ் ஆனது தான் நாற்றங்கால் வளர்ப்பு. நம்பிக்கையுடன் இந்த தொழிலை செய்தால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம்’’ என்று உறுதியாக சொல்லி வியப்பூட்டுகிறார் விவசாயத்தில் புதிய அத்தியாயம் படைக்கும் ராதிகா. சேலம் மாவட்டத்தில் பசுமை பரந்து கிடக்கும் பனமரத்துப்பட்டி பகுதியில் பூக்கள் சாகுபடி பிரதானமாக உள்ளது. இதைதவிர நெல், கரும்பு, வாழை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, இங்குள்ள குரால்நத்தம் பகுதியில் 4 ஏக்கரில் கவனத்தை ஈர்த்து நிற்கிறது நவீனமான நாற்றுப்பண்ணை. இதில் தலையில் முண்டாசு கட்டியபடி பம்பரமாய் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார் ராதிகா. நாற்றுகளை குழந்தைகள் போல் பார்த்து பார்த்து அவர் வளர்க்கும் பாங்கும், பராமரிப்பு முறைகளும் வியக்க வைக்கிறது. ‘‘நான் முன்பே சொன்னது போல, எனது கணவர் வீட்டிற்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் இது. இங்கே பயிர்சாகுபடியை அவர்கள் பிரதானமாக மேற்கொண்டனர். ஒரு கட்டத்தில் பல்வேறு காலசூழ்நிலைகளால் அதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. பிறகு இங்கு பண்ணை அமைத்து பார்த்தோம். அதுவும் சரிப்படவில்லை. இதனால் ஆர்வம் என்பது எங்கள் குடும்பத்தாரிடம் அறவே குறைந்துவிட்டது. ஆனால் எனக்குள் மட்டும் ஒரு பொறி இருந்தது. பயிர்சாகுபடி இல்லாமல் விவசாயம் சார்ந்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் வேளாண் அலுவலகத்திற்கு செல்லும் நிலை உருவானது. அப்போது பயிரை விட, அதற்கான நாற்று வளர்ப்பு மிகவும் நல்லது என்று அதிகாரி ஒருவர் கூறினார். இதனால் நமது நிலத்தில் ஏன் இதை செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. எது நடந்தாலும் பின்வாங்க கூடாது என்று முடிவெடுத்து முழு நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினேன். ஆரம்பத்தில் கால் ஏக்கரில் மட்டுமே நாற்றுவளர்ப்பை ஆரம்பித்தேன். அதிகாரிகள் கொடுத்த அறிவுரைகளும், எனது உழைப்பும், உறுதியும் புதிய நம்பிக்கையை கொடுத்தது. நாற்றுகள் நல்லநிலையில் வளர்ந்தது. அக்கம்பக்கத்தில் இருந்து விவசாயிகள் எங்களை தேடி வர ஆரம்பித்தனர். இப்போது 4 ஏக்கரிலும் நாற்றுப்பண்ணை விரிவாகி நல்ல பலனை தந்து ெகாண்டிருக்கிறது. இந்த நாற்று வளர்ப்பை பொறுத்தவரையில் முதலில் எந்த சீசனுக்கு, விவசாயிகளுக்கு என்ன பயிர் தேவை என்பதை உணர்ந்து நாம் உற்பத்தி செய்ய வேண்டும். தக்காளி, மிளகாய், கத்திரி, வாழை போன்ற நாற்றங்கால் எப்போதும் தேவைப்படும். ஒரு சில நாற்றுக்கள் சீசனுக்கு மட்டுமே தேவைப்படும். இதை உணர்ந்து முதலில் தரமான விதைகளை நாம் வாங்க வேண்டும். குழித்தட்டுகளில் தேங்காய்நார் கழிவுகளால் நிரப்பி 1-2 சென்டி மீட்டர் ஆழத்தில் விதையை ஊன்றவேண்டும். பிறகு அதே கழிவுகளை கொண்டு மூடவேண்டும். 3 நாட்கள் சூரியஒளி படாத காற்று இல்லாத இடத்தில் அதனை வைக்க வேண்டும். விதைகள் முளைப்பு வந்தவுடன் அதற்கான பிரத்யேக பாலித்தீனில் அதனை சேமிக்க வேண்டும். இதனை வரிசைப்படுத்தி வைப்பதற்கு டிரேக்கள் உள்ளது. ஒரு டிரேவில் 100 நாற்றுகள் அடுக்கலாம். இந்தவகையில் ஒரு ஏக்கர் நிலத்தில் 6ஆயிரம் டிரேக்களில் நாற்று வளர்த்து 20 நாட்கள் பராமரிக்கலாம். பூவாளி மூலம் தினமும், காலையிலும் மாலையிலும் நீரூற்ற வேண்டும். இப்படி பராமரித்தால் தரமான விதைகள் அனைத்தும் 21 முதல் 30 நாட்களில் நாற்றுகளாக வளர்ந்து நல்ல பயன் தரும். நம்பிக்கையுடன் நாற்று உற்பத்தியை மேற்கொண்டால் செலவுகள் அனைத்தும் போக, ஒரு ஏக்கருக்கு நிச்சயமாக மாதம் ரூ.50 ஆயிரம் வருவாய் ஈட்டலாம். ஆர்வமுள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க காத்திருக்கிறேன்” என்கிறார். இவ்வாறு நிறைவு செய்தார் நாற்றங்கால் வளர்ப்பின் நம்பிக்கை பெண்மணியான விவசாயத்தோழி ராதிகா. திசு வாழைதிசு வாழை கன்றுகள் ஜி-9 வகையை சேர்ந்தது நம்முடைய வாழை போன்று அல்லாமல் சிறிய செடி போல இருக்கும். 11 மாதத்தில் காய்ப்பு எடுக்க ஆரம்பித்து ஒரு தாரில் 135 முதல் 140 காய்கள் இருக்கும்.  ஒரு வாழை காய்த்து முடிந்தவுடன் அதை வெட்டிவிட்டு, அதன் பக்க கன்று மூலம் அடுத்த வாழை உருவாகிறது. ஒரு வாழை வைத்தால், மூன்று முறை மகசூல் பெற முடியும். ஆறு அடிக்கு ஒரு கன்று நட வேண்டும். 15-வது நாளில் ஒரு வாழைக்கு 5 கிலோ மாட்டு சாண உரம், 200 கிராம் டி.ஏ.பி., 200 கிராம் பொட்டாஷ் இட வேண்டும். 40-வது நாள் இதே அளவு எரு உரம் இட வேண்டும்.150-வது நாள் 10 கிலோ மாட்டு சாணம் மட்கியது வைக்க வேண்டும். திசு வாழையை பொறுத்தவரை நீர் சத்து அதிகம் தேவை. இதனால் சொட்டு நீர் பாசனம் சிறந்தது. இந்த வாழை 6-வது மாதம் பூக்கும். 8-வது மாதம் காய்க்க துவங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் செலவாகும். ஆனால், வருமானமோ ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் லாபமாக கிடைக்கும். வாழையின் ஊடே காய்கறி விவசாயமும் மேற்கொள்ளலாம்.

தொடர்புக்கு: ராதிகா  63834 37411
தொகுப்பு: ஜி.காந்தி

The post நாற்று வளர்ப்பை நம்புங்க! நல்ல லாபம் பாருங்க! appeared first on Dinakaran.

Tags : Rathika “ ,Native Aathur ,Dinakaran ,
× RELATED திடீர் சாம்பார், திடீர் கேசரி போல்...