×

சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை தொடங்கியது

சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலை தடயவியல் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்கின்றனர்.

ஓட்டல் அறையில் வருங்கால கணவருடன் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கன்னத்தில் இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா(28). பிரபல சின்னத்திரை நடிகை. 2013-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி மற்றும் விழாக்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் டிவியில் பல்வேறு தொடரில் நடித்திருந்தார். நிறைய பிரபலமான துணிக்கடைகள், தனியார் மருத்துவமனை ஆகியவற்றின் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் சித்ரா. கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒரு தொடரில் சித்ரா நடித்து வந்தார். இவருக்கென்று தனி ரசிகர் வட்டமே உள்ளது. இந்த சீரியல் படப்பிடிப்பு செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தினமும் திருவான்மியூர் சென்று வந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்பதாலும், இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடப்பதாலும் பழஞ்சூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சித்ரா தங்கவைக்கப்பட்டிருந்தார்.

மேலும், இவருக்கும் பூந்தமல்லி கரையான்சாவடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால், ஓட்டலில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஓட்டல் அறைக்கு சித்ரா வந்துள்ளார். அவருடன் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத் தங்கியிருந்துள்ளார். அப்போது தான் குளிக்கப்போவதாகவும், எனவே, நீங்கள் வெளியே நில்லுங்கள் என்று ஹேம்நாத்திடம் சித்ரா கூறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் அறையை விட்டு வெளியே வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்கவில்லையாம். கதவை தட்டிப் பார்த்தும் பதில் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹேம்நாத் ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். பின்னர் மாற்று சாவி கொண்டு கதவை திறந்து பார்த்த போது, சித்ரா புடவையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார். இது குறித்து உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓட்டல் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்று உடலை மீட்டார். பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகி, மாற்று சாவி கொடுத்ததாகக் கூறப்படும் ஊழியர் கணேஷ், ஹேம்நாத் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் நடிகை சித்ராவுக்கு அவர் சார்ந்த துறையில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் திருவான்மியூரில் உள்ள சித்ராவின் தாயாருக்கும் ஹேம்நாத்துக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் சித்ராவும் ஹேம்நாத்தும் அறை எடுத்து தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. சித்ராவின் கன்னத்தில் இரு இடங்களில் காயம் உள்ளது. யாராவது அடித்ததுபோல அந்த காயம் உள்ளது. இதனால் அடித்ததில் அவர் இறந்திருக்கலாம். பின்னர் அவர் தூக்கில் தொடங்க விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

மேலும், சித்ரா, ஹேம்நாத் இடையே தகராறு ஏதும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சித்ராவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கடைசியாக யாருடன் தொடர்பில் இருந்தார், அவருக்கு வந்த குறுந்தகவல்கள் யார் யாரிடமிருந்து வந்தன என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சம்பவ தினத்துக்கு முன்தினம் நள்ளிரவு வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சித்ரா மிகவும் ஆக்டிவ் வாக இருந்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அவர் இயல்பாக சாட்டிங் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ஒரு படத்தையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நடிகை சித்ராவின் கன்னம் மற்றும் தாடையில் காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். சடலமாக மீட்கப்பட்ட நடிகை சித்ராவின் தாடையில் இருக்கும் காயம் தூக்கு மாட்டிக்கொண்டபோது புடவையால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் முகத்தில் நகக்கீறல் எப்படி வந்தது என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலை செய்த போது அறையில் சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றியும் ஹேம்நாத்திடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனையில்தான் சித்ரா மரணம் அடைந்தது எப்படி? என்பது உறுதியாக தெரியவரும். அதன் பிறகே சித்ரா, தற்கொலை வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் படப்பிடிப்பு நடைபெற்ற பிலிம் சிட்டியிலும் அவரோடு படப்பிடிப்பில் கலந்துகொண்டவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிடப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மகளின் மரணத்துக்கான காரணம் என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். நடிகை சித்ராவின் மர்மசாவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : autopsy ,Chitra ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?