×

 சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விபரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விபரங்களும் கோரப்பட்டுள்ளன. 28,000 சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது. பள்ளி, சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சத்துணவுத் திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு ஐயமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. முதல்வர் மாணவர்களின் நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காகவுமே காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளார். அத்திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டம் முதலமைச்சரின் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது மட்டுமில்லாமல் “வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்” என்று முதல்வர் அறிவித்துள்ளார். அப்படியிருக்க சத்துணவுத் திட்டத்துறையில் உள்ள சத்துணவு மையங்களை எப்படி அரசு மூட முயற்சி எடுக்கும். சத்துணவு மையங்களில் உள்ள  காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், சத்தான உணவை முறையாக மாணவர்களுக்கு வழங்கிடவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்திடவுமே அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post  சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister Keita Jeevan ,Chennai ,Social Welfare ,Minister ,Keita Jeevan ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி...