×

இந்தி படப்பிடிப்பில் தொற்று வருண் தவான், நீது கபூருக்கு கொரோனா

மறைந்த பாலி வுட் நடிகர் ரிஷி கபூரின் மனைவியும், நடிகர் ரன்பீர் கபூரின் தாயாருமான நீது கபூர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியில் நடிக்கும் படம் ‘ஜக் ஜக் ஜீயோ’. கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சண்டிகரில் தொடங்கியது. முன்னதாக, ஷூட்டிங்கில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதுகுறித்து நீது கபூர் கூறுகையில், பரிசோதனைகள் நடந்தது உண்மை என்றும், தனக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 62 வயதான நீது கபூரை விமான ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு வரவழைத்து, உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை ரன்பீர் கபூர் செய்து உள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் ராஜ் மேத்தா, ஹீரோ வருண் தவான் இருவரும் சண்டிகரிலேயே தனிமையில் தங்கி இருக்கின்றனர். அவர்களுடன் அனில் கபூர், நடிகை கியரா அத்வானி ஆகியோர் படப்பிடிப்பில் பங்கேற்றனர். ஆனால், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனில் கபூர் கூறும் போது, ‘வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். எனக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களின் அக்கறைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி’ என்றார். அவரது மகள் நடிகை சோனம் கபூர், ‘அவசரப்பட்டு எந்த தகவலையும் பரப்ப வேண்டாம். என் தந்தைக்கு கொரோனா தொற்று இல் லை’ என பதிவுசெய்துள்ளார்.

Tags : Varun Dhawan ,Corona ,Neetu Kapoor ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...