- அரசு பெண்கள் பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆயக்காரன்புலம் மூன்றாம்
- நாகை மாவட்டம்
- ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் பள்ளி
வேதாரண்யம் : நாகை மாவட்டத்தின் தலை சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தியில் பசுமை மாறா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு மறைந்த மீனாட்சி சுந்தரம் தனக்கு சொந்தமான சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி பெண்களுக்கென 1992 இல் தனிப்பள்ளி உருவாக வழித் தடம் அமைத்து ஒரு ஆண் கல்வி கற்றால் குடும்பம் உயரும் ஒரு பெண்கல்வி கற்றால் சமுதாயம் முன்னேறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆயிரக்கணக்கான பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுத்தார். பள்ளி தொடங்கிய காலத்தில் சில நூறுகளில் ஆரம்பித்த மாணவிகளின் சேர்க்கை தற்போதுஆயிரம்| நூறு மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களின் இணையற்ற ஈடுபாடும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெரு முயற்சியும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பணியும்தான் இதற்கு காரணம். மாவட்ட அரசு பள்ளிகளில் ஆண்டு பொதுத்தேர்வில் அதிகமான மாணவிகளை தேர்வு எழுத வைத்து அதிக பட்ச தேர்ச்சி விழுக்காட்டை பெற்றுத் தரும் பள்ளியாக மட்டும் திகழாமல், பன்முகத்திறன் வளர்க்கும் பள்ளியாகவும் திகழும் காரணத்தால் மாநில அரசின் மிகச்சிறந்த பள்ளிகளுக்கான சிறந்த விருதான காமராஜர் விருதை பெண்கள் பள்ளிக்கு தமிழக அரசு வழங்கி உள்ளதுமேலும் 2020ம் ஆண்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒரு மாணவியும் 2021ம் ஆண்டில் இரண்டு மாணவியும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் பள்ளியை சேர்ந்த 5 மாணவிகள் இக்கல்வியாண்டில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். ஒரே பள்ளியில் அதிக மாணவிகள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளது இப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நாகை வலிவலம் தேசிகர் அறக்கட்டளை வழங்கும் சிறந்த தேர்ச்சி வழங்கும் பள்ளிகளுக்கான சழற்கோப்பையை தொடர்ந்து இப் பள்ளியே பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவிகள் பயில்வதோடு மட்டுமல்லாமல் அருகில் அமைந்துள்ள மாவட்டத்திலிருந்தும் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுவது கூடுதல் சிறப்பு.மாணவிகள் பாதுகாப்பாக தங்கிப் பயில்வதற்கு வசதியாக பள்ளி வளாகத்திற்குள்ளேயே இரண்டு இலவச அரசு மாணவிகள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளிதானா என நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் ஆயக்காரன்புலம் பள்ளி மாணவி தமிழ்மொழியில் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். 2013ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்ட முதலிடம் பெற்றமைக்காக சுழற்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.2008ல் மாவட்ட அளவில் 12ம் வகுப்பில் மூன்றாம் இடமும் 2009ல் மாவட்ட அளவில் 2ம் இடமும் 2010ல் மாவட்ட அளவில் 2ம் இடமும் பெற்றுள்ளனர். 2013, 2017 மற்றும் 2022ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இப் பள்ளி மாணவிகள் மாவட்ட முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 2011 மற்றும் 2013ல் பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் 2 மற்றும் 3ம் இடம் பெற்றனர். 2012ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 20 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப் களில் 11 லேப்டாப்களை இப்பள்ளி மாணவிகளே பெற்றனர்.இதுமட்டுமின்றி விளையாட்டு போட்டிகளான ஈட்டிஎறிதல், தட்டு எறிதல், தடகளம் உள்ளி போட்டிகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை புரிந்துள்ளனர். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வாகையாளர் எனப்படும் சாம்பியன்ஷிப் பெற்றது இப்பள்ளியின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. 2016ம் ஆண்டில் நடைபெற்ற மாநில அறிவியல் கண்காட்சியில் இப்பள்ளி மாணவி முதலிடம் பெற்றார். மேலும் நடப்பு கல்வி ஆண்டில் மாவட்ட அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம்.பெண்களுக்கென தனிப் பள்ளியாக உருமாற்றம் அடைந்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் பள்ளியில் பயின்ற மாணவிகள் பொறியாளர்களாக மத்திய, மாநில அரசு பணிகளிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும் தனி முத்திரை பதித்து வருகின்றனர். இத்தனைசிறப்புக்கும் இரவு பகல் பாராது கடுமையாக உழைக்கும் இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களை போற்றுவோம்….
The post ஆயக்காரன்புலம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய 8 மருத்துவர்களை உருவாக்கிய அரசு பெண்கள் பள்ளி-30 ஆண்டாக தொடர் சாதனை விளையாட்டிலும் அசத்தல் appeared first on Dinakaran.